உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி பெறும் முதல் ஐசிசி கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை வென்றதன் மூலம் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனத்தை கேன் வில்லியம்சன் தவிடு பொடி ஆக்கியுள்ளார். மற்றொரு புறம் இந்திய கேப்டன் விராட் கோலி இன்னும் ஐசிசி கோப்பையை வெல்லாத கேப்டனாகவே தொடர்கிறார்.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘தி அல்டிமேட் டெஸ்ட்’ போட்டி என அழைக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது மூலம், கேப்டன் கோலி பதவி விலக வேண்டுமென்ற கருத்து வலு பெற்று வருகின்றது.
போட்டி முடிந்தபிறகு பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள் என கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்கள் நியூசிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில், மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் இந்திய அணி தோற்றது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
”உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பிளாக் கேப்ஸ் (நியூசிலாந்து) வென்றதற்கு வாழ்த்துக்கள், நீங்கள்தான் சூப்பர் டீம். டீம் இந்தியா தனது ஆட்டத்தைப் பார்த்து ஏமாற்றமடைந்திருக்கும். நான் ஏற்கெனவே கூறியது போல் முதல் 10 ஓவர்கள் மிகவும் முக்கியம். ஆனால் 10 பந்துகள் இடைவெளியில் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் ஆட்டமிழந்தது அடுத்து வரும் வீரர்களுக்கு அதிக அழுத்தத்தை தந்தது.” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து அணி 249 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச்சாதனையை படைத்தது.