உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி பெறும் முதல் ஐசிசி கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை வென்றதன் மூலம் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனத்தை கேன் வில்லியம்சன் தவிடு பொடி ஆக்கியுள்ளார். மற்றொரு புறம் இந்திய கேப்டன் விராட் கோலி இன்னும் ஐசிசி கோப்பையை வெல்லாத கேப்டனாகவே தொடர்கிறார். 


கோலி மற்றும் வில்லியம்சன் இடையே களத்தில் தீவிர போட்டி இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் நல்ல நட்பு இருந்து கொண்டுதான் வந்துள்ளது. நவீன கிரிக்கெட் உலகில் மூன்று தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பட்டியலிட்டால் அதில் கோலி,ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் நிச்சயமாக இருப்பார்கள். இவர்களுடன் ஜோ ரூட்டையும் சேர்த்தால் அவர்கள் தான் நவீன கிரிக்கெட் உலகின் ஆக சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட்டணியாக இருப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 


இவர்கள் அனைவருடனும் கோலி நல்ல நட்பை வைத்திருந்தாலும் கோலி-வில்லியம்சன் நட்பு மற்றும் கிரிக்கெட் வளர்ச்சி என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அப்படி அவர்கள் இருவருக்கும் இடையே என்னதான் பந்தம் உள்ளது. 


2008 யு-19 உலகக் கோப்பை:




2008-ஆம் ஆண்டு யு-19 உலக கோப்பை தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கோலி களமிறங்கினார். நியூசிலாந்து அணியின் கேப்டனாக வில்லியம்சன் களமிறங்கினார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் இத்தொடரில் அரையிறுதிப் போட்டியில் மோதின. அதில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி வென்றது. இந்தத் தொடரில் கோலி 6 போட்டிகளில் 235 ரன்கள் அடித்தார். அதேபோல் வில்லியம்சன் 5 போட்டிகளில் 124 ரன்கள் அடித்தார். அரையிறுதிப் போட்டியின் போது வில்லியம்சன் விக்கெட்டை விராட் கோலி தான் எடுத்தார். அப்போது முதல் இவர்களிடையே களத்தில் போட்டி தொடங்கி இருந்தாலும் நல்ல நட்பும் தொடங்க ஆரம்பித்தது. 


இருவரின் தேசிய அணிப் பயணம்:


விராட் கோலி 2008ஆம் ஆண்டே இந்திய அணியில் இடம்பிடித்தார். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய விராட் கோலி அதன்பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். வில்லியம்சன்விட கோலி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து இருந்தாலும் இவர்களும் சேர்ந்தே வளர்ந்துள்ளனர். 




வில்லியம்சன் 2010-ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டியில் சொதப்பி இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து வில்லியம்சன் வெளிச்சம் பெற்றார். இவர்கள் இருவரும் தற்போது 7ஆயிரம் டெஸ்ட் ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். விராட் கோலி 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7547 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல் கேன் வில்லியம்சன் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7230 ரன்கள் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளை பொறுத்தவரை கோலி வில்லியம்சனைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளார். 


கோலி-வில்லியம்சன் கேப்டன் ரெகார்டு:


எப்படி வில்லியம்சனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலி அறிமுகம் ஆனாரோ, அதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே கேப்டன் பதவியையும் பெற்றார். 2014ஆம் ஆண்டு விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை பெற்றார். கேன் வில்லியம்சன் 2016-ஆம் ஆண்டு மெக்கல்லம் ஓய்விற்கு பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியை பெற்றார். விராட் கோலி 61 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய கேப்டனாக செயல்பட்டு 36 வெற்றி, 15 தோல்வி மற்றும் 10 டிரா செய்துள்ளார். 




அதேபோல நியூசிலாந்து டெஸ்ட் அணியில் கேப்டனாக வில்லியம்சன் 37 டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டு 22 டெஸ்ட் 8 தோல்வி மற்றும் 7 டிரா செய்துள்ளார். இவர்கள் இருவருரின் டெஸ்ட் வெற்றி சதவிகிதமும் 59 ஆக உள்ளது. ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை கோலி 95 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு 65 வெற்றியை பெற்றுள்ளார்.  வில்லியம்சன் 78 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 42 வெற்றியை பெற்றுள்ளார். மேலும் இந்த இருவரும் கேப்டனாக செயல்படும் நல்ல பேட்டிங்கை செய்துள்ளனர். கோலி கேப்டனாக 5392 ரன்களும், வில்லியம்சன் 3078 டெஸ்ட் ரன்களையும் அடித்துள்ளனர். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் இவர்களுடைய பேட்டிங் சராசரி கேப்டனாக இருக்கும் போது அதிகமாக உள்ளது. 


கோலி-வில்லியம்சன் ஐசிசி தொடர் செயல்பாடுகள்:


விராட் கோலி வீரராக 2011ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையை வென்றார். அத்துடன் யு-19 உலகக் கோப்பை தொடரை கேப்டனாக வென்றார். அதற்கு பின் சினீயர் அணியில் கேப்டனாக வந்த பிறகு 2017 சாம்ப்யின்ஸ் கோப்பை, 2019 உலகக் கோப்பை என ஒன்றில் கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. அதேபோல் தான் கேன் வில்லியம்சனும் 2017 சாம்பியன்ஸ் கோப்பை, 2019 உலகக் கோப்பை என எந்த ஐசிசி தொடரிலும் நியூசிலாந்து அணி வெல்ல இல்லை. இப்படி இருந்தச் சூழலில் தற்போது தனது முதல் ஐசிசி கோப்பையை வென்று கேன் வில்லியம்சன் கனவை பூர்த்தி செய்துள்ளார். 


இருவரின் நட்பு:


இவர்கள் இருவருக்கு இடையே 2008ஆம் ஆண்டு முதல் நல்ல நட்பு இருந்து வந்தது. இது தொடர்பாக வில்லியம்சன், “நாங்கள் இருவரும் சிறிய வயது முதல் எதிர் எதிராக களமிறங்கி விளையாடி வருகிறோம். கோலிக்கு எதிராக விளையாடி அவருடன் சேர்ந்து வளர்வது நன்றாக உள்ளது. நாங்கள் இருவரும் எப்போதும் ஆட்டம் தொடர்பாக பேசி கருத்துகளை பரிமாறிக்கொள்வோம்” எனத் தெரிவித்தார். 




அதேபோல் விராட் கோலி,”நான் யு-19 உலகக் கோப்பை முதல் வில்லியம்சனின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர் சம காலத்திலிருந்த நியூசிலாந்து வீரர்களைவிட முற்றிலும் மாறுபட்டவர். அத்துடன் சிறப்பாக பேட்டிங்க் செய்ய கூடிய நபர். நானும் வில்லியம்சனும் நல்ல நண்பர்கள். களத்திற்கு வெளியே நிறையே கருத்துகளை பரிமாறி கொள்வோம். எங்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு நல்ல மரியாதை உண்டு” எனக் கூறியுள்ளார். 


இப்படி கிரிக்கெட்டையும் தாண்டி இந்த தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்களுக்கும் பெரிய பந்தம் தொடர்ந்து கொண்டேதான் போகிறது. அதன் வெளிப்பாடு தான் நேற்றைய வெற்றிக்கு பிறகு கோலி வில்லியம்சனை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்ததற்குக் காரணம்.


மேலும் படிக்க: நியூசிலாந்து அணிக்கு குவியும் முன்னாள் இந்திய வீரர்களின் வாழ்த்து..!