தரவரிசைப்பட்டியலில் இந்திய அணிபெரும் பின்னடைவைசந்தித்து 5ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
விவேக் சொல்லும் “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்ற விவேக்கின் வசனம் தற்போதைய இந்திய அணிக்கு பக்காவாகப் பொருந்தும். நேற்று வெளியான ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் நியூஸிலாந்து முதலிடத்தையும், 124 புள்ளிகளுடன் இங்கிலாந்து இடண்டாமிடத்தையும், 107 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்தையும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4வது இடத்தையும், 105 புள்ளிகளுடன் இந்தியா 5வது இடத்தையும் பிடித்துள்ளன. பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனானத் தொடருக்கு முன்பு 102 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்தது. அந்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 3க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்த அணியின் புள்ளிகள் 106க்கு உயர்ந்து தரவரிசைப் பட்டியலிலும் 4வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. நான்காவது இடத்தில் இருந்த இந்திய அணி 5வது இடத்திற்குத்தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மொத்தமாக வெறும் 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடியிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 ஒரு நாள் போட்டிகளிலும் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு பிப்ரவரியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் 3க்கு 0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதன்பிறகு ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிவிட்டதால் தொடர் முடியும் வரை எந்த போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை. ஐபிஎல்லுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் தற்போது தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியா தற்போது புள்ளிப்பட்டியலில் பின் தங்கியிருக்கலாம். ஆனால் ஜூலை 12ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து தொடர் மற்றும் 22 ஜூலையில் தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடர் ஆகிவற்றில் தலா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது இந்திய அணி. இந்த போட்டிகளில் சிறப்பாக இந்திய அணி விளையாடும் பட்சத்தில் இந்திய அணியை விட 2 புள்ளிகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்குத் தள்ளி தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறும். மேலும், பாகிஸ்தானுக்கு அடுத்த ஒருநாள் தொடர் ஆகஸ்ட் மாதத்தில் தான் அதுவும் ஒரே ஒரு தொடர்தான் இருக்கிறது என்ற நிலையில் இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணிக்கு முன்னேற்றம் இருக்கும் என்றே நம்பலாம்.
தற்போது ஓய்வில் இருக்கும் விராட்கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.