இன்று சென்னையில் நடந்த ஆர்.சி.பி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.பி.எல் 2021ம் ஆண்டு தொடரின் 10வது ஆட்டம் இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் மாலை 3.30 மணியளவில் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களுரு அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதலில் களமிறங்கிய அணியின் கேப்டன் கோலி 6 பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.  



 


அதன் பிறகு களமிறங்கிய ரஜத் பட்டிடாரும் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். களத்தில் இருந்த தேவ்தத் படிக்கல் சற்று நிதானமாக ஆடி 28 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து மூவர் ஆட்டமிழந்த நிலையில் களமிறங்கினார் மாக்ஸ் வெல். டீ வில்லேர்ஸ் மற்றும் மாக்ஸ் வெல் ஆகியோர் நின்று நிதானமாக ஆடி பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் 49 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் மாக்ஸ் வெல். மேலும் டீ வில்லேர்ஸ் 34 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து. 




205 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை காட்டினாலும், தொடர்ந்து விக்கெட்களை இழந்தது தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராணா மற்றும் கில் முறையே 18 மற்றும் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஹர்பாஜன் மற்றும் வருண் சக்ரவர்த்தி களத்தில் இருந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஐ.பி.எல் தொடரின் இந்த ஆட்டத்தை வென்றது.