ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தாய் நிறுவனமான டியாஜியோ 45 கோடி ரூபாயை பொது சுகாதார மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்டம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த தேவையான மருத்துவ வசதிகளை அர்ப்பணிக்க உள்ளோம் என அதன் நிர்வாக இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டியாஜியோ வழங்க உள்ள மருத்துவ வசதிகள்:
- 21 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் PSA முறையில் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை நிறுவ உள்ளோம்.
- மருத்துவ படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் - அனைத்து வசதிகளுடன் கூடிய 16 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவமனை யூனிட்களை, ஆக்சிஜன் வசதியுடன் 15 முக்கிய தேவையுள்ள மாவட்டங்களில் நிறுவ உள்ளோம்.
- முக்கிய மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் செறிவூட்டி, ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர் வசதிகளுடனான படுக்கைகள், அவசர கால சிகிச்சை வழங்க தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை 10 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளின் அவசர தேவையை போக்க அனுப்புகிறோம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர், டியாஜியோ நிர்வாக இயக்குனர் ஆனந்த் க்ரிபாலு "நாடே மிகப்பெரிய ஒரு நெருக்கடி நிலையை சந்திக்கிறது, இதில் எங்களால் ஆன ஆதரவை அரசின் முயற்சிக்கு வழங்கி, நாட்டு மக்களுடன் துணை நிற்க விரும்புகிறோம். நீண்ட கால மருத்துவ கட்டமைப்புகளில் குறிப்பாக மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வது இதுவே தற்போதைய முக்கிய தேவை, அதற்கு எங்களுடைய பங்களிப்பு கைகொடுக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களால் ஆன உதவிகளை வழங்கி வருகின்றனர், அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் ரிலையன்ஸ் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது, அதன் பின்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் வழங்கியுள்ள 45 கோடி ரூபாய் தொகையே அதிகபட்சமாகும். சன் ரைசர் ஹைதெராபாத் அணி 10 கோடி ரூபாய், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி ரூபாய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.