நாடு முழுவதும் பரவலாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பு பதிவானதை அடுத்து அது பெருவாரியாகப் பரவும் (Epidemic) நோயாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பீகாரில் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு பதிவானது.வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தானது எனச் சொல்லப்பட்டது. அது கருப்புப்  பூஞ்சையை விட நான்கு மடங்கு ஆபத்தானது என்றார்கள் மருத்துவ நிபுணர்கள். நுரையீரல், நகம், தோல், வயிறு,சிறுநீரகம்,வாய் மற்றும் பிறப்புறுப்புகளை இந்தவகைப் பூஞ்சைகள் பாதிக்கும் என்றனர்.குறிப்பாகக் குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறினர். இதற்கிடையே தற்போது புதிதாக மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பு உத்திரபிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்ற இரண்டு பூஞ்சைகளை விடவும் இது ஆபத்தானது எனக் கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட நபர் தற்போது காசியாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




இதற்கான அறிகுறிகள் என்ன?
சோகை, குறைந்த பசி அல்லது பசியின்மை, எடை குறைதல் ஆகியன இந்த பாதிப்பின் அறிகுறிகள். மஞ்சள் பூஞ்சை தீவிரமாக பாதிக்கப்படும் நிலையில் சீழ் வடிதல், உடலில் உள்ள காயங்கள் ஆறுவதில் காலதாமதம் ஏற்படலாம். மேலும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு ஆகியன உருவாகும். உடலின் உள்ளுறுப்புகளை முதலில் பாதிப்பதால் மஞ்சள் பூஞ்சை உயிருக்கு ஆபத்தானது அதனால் அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

நோய் பாதிப்புக்கான இதற்கான காரணங்கள் என்ன?

சுகாதாரக்கேடு உள்ள இடங்களில்தான் மஞ்சள் பூஞ்சைகள் வளரும்.இதனால் வீட்டைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் தூய்மையாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பழைய உணவுப்பொருட்கள் அல்லது கழிவுகள் தென்பட்டால் அதனை உடனுக்குடன் நீக்க வேண்டும்.வீட்டின் தட்பவெப்பத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதிக ஈரப்பதம் உள்ள வீடுகளில்தான் பூஞ்சைகளும் பாக்டீரியாக்களும் தங்கும். அதனால் வீட்டின் ஈரப்பதம் 30-40 சதவிகிதத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.இதன் வழியாக பூஞ்சை வளருவதைத் தடுக்கலாம்.

Also Read: கறுப்புப் பூஞ்சைக்கு அடுத்து வெள்ளைப் பூஞ்சை: குழந்தைகளை பாதிக்குமா?