சென்னை, கே.கே. நகரில் அமைந்துள்ளது தனியார் பள்ளியின் இந்த பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பாலியல் புகாரை கூறியுள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் வலுத்துவருகின்றன. அந்தப் பள்ளியின் பயின்ற முன்னாள் மாணவி, தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் அந்த ஆசிரியர் மீதான பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் புகாரைப் பகிர்ந்திருந்தார்.
மாணவி பகிர்ந்திருந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன், ஆசிரியர்கள் – மாணவர்கள் பாடம் நடத்துவதற்கான குழுவில் ஆபாச வீடியோக்களுக்கான இணைப்புகளை பகிர்ந்தததாகவும், மாணவிகளை திரைப்படத்திற்கு அழைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
மாணவியை ஆசிரியர் ராஜகோபாலன் திரைப்படத்திற்கு அழைத்ததற்கான ஆதாரத்தையும் முன்னாள் மாணவி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமின்றி, ஆன்லைன் வகுப்பின்போது வெறும் துண்டுடன் மட்டும் வகுப்பை நடத்துவது போன்ற விரும்பத்தகாத செயல்களிலும் அவர் ஈடுபட்டிருப்பதும் ஆதாரத்துடன் பகிரப்பட்டுள்ளது.
ஆசிரியரின் இந்த பாலியல் குற்றங்களுக்காக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்பட பல தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, அந்த பள்ளியில் தற்போது அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சம்மந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளியும் ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் அதன் பின் உரிய விளக்கம் அரசுக்கு அளிப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற புகார் பள்ளியின் மீது இருந்தால் கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். புகார் குறித்து விசாரிக்க மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலரின் அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் சி.பி.எஸ்.சி., பொதுத்தேர்வுகள் தொடர்பான பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “ பள்ளி கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு இரண்டு கட்டமாக நடத்துவது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது.இன்று மதியம் இறுதி முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவு எடுக்கவில்லை, ஆனால் விரைவில் அதற்கான பணிகள் ஆன்லைன் வாயிலாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வலர்களாகவே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனி கவனம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்படும்.10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 1ம் தேதிக்குள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது. பெற்றோர்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.