திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என சொல்லும் விதமாக ரீ என்ட்ரீ கொடுத்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் சின்னத் தல ரெய்னா. கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகினார். இது CSK அணியின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதித்தது. இந்த நிலையில் இந்த வருடம் அணிக்கு திரும்பிய ரெய்னா தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டது சென்னை அணி.




தொடக்க வீரர்கள் சீக்கிரம் விக்கெட்டுகளை இழந்த நிலையில் மூன்றாவது வீரராக களமிறங்கினார் ரெய்னா. ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் ரெய்னாவுக்கு ரொம்ப காலமாக பிரச்சினை உண்டு. டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு ரெய்னாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஸ்வினைக் கொண்டு வந்தார் டெல்லி கேப்டன் பந்த். அஸ்வின் ரிதமுக்கு வந்து விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்த ரெய்னா, அவரை ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடினார். இன்னொரு பக்கம் வேகப்பந்து வீச்சாளர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ரெய்னா, சூறாவளியாக சுழன்று அடித்தார். 36 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 56 ரன்கள் குவித்து அசத்தினார். தொடரின் ஆரம்பத்திலேயே ரெய்னா ஃபார்முக்கு வந்திருப்பது சென்னை அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரெய்னாவின் அதிரடிக்கு உதவும் வகையில் சுட்டிக் குழந்தை என அன்போடு அழைக்கப்படும் சாம் கரனின் அதிரடி சென்னை அணியை 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து188 ரன்கள் எடுத்தது.