டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரஃபேல் நடால் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். அதில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு விளையாடுவது தான் பிரெஞ்சு ஓபன் டென்னிஸிலும், மற்ற டென்னிஸ் தொடர்களில் விளையாடுவதும் அவரது டென்னிஸ் வாழ்க்கையில் இறுதி ஆண்டாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இவரது இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது டென்னிஸ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 


செய்தியாளர் சந்திப்பில் தனது ஓய்வு குறித்து கூறிய அவர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. அதனை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.மேலும் 2024 தொழில்முறை டென்னிஸில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். "இது நான் எடுக்கும் முடிவு அல்ல, என் உடல் எடுக்கும் முடிவு" என்று  அவர் கூறினார். ஸ்பானிஷ் சூப்பர் ஸ்டாரான நடாலுக்கு தற்போது 36 வயதாகிறது. 




2005 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றது முதல், இதுவரை 14 பட்டங்களை வென்றுள்ளார்.  பிரெஞ்சு ஓபனில் இவர் ஒரு முடி சூடா மன்னராகத்தான் இருந்துள்ளார். 2005 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் முயற்சியிலேயே பிரெஞ்சு ஓபனை வென்றபோது, ​​அவர் தனது 19வது பிறந்தநாளை கடந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தது. அதேபோல், 14வது பட்டத்தினை வெல்லும் போது அவருக்கு வயது 36. இதனால் அதிக வயதில் பிரென்சு ஓபன் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையும் அவர் வசமானது. நடால் 2003 இல் விம்பிள்டனில் தனது கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 17 வயதிலேயே அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் போட்டியிலேயே அரங்கம் முழுவதையும் தனது சிறப்பான ஆட்டத்தினால் கட்டுக்குள் வைத்திருந்தார் 17 வயது நிரம்பிய இளம் நாயகன். 




கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் நடால் விளையாடும் போது இது தான் தனது கடைசி ஆட்டம் என யாரும் நினைத்திருக்கலாம்.  இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே நடால் புள்ளிகளை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினார். இதனால், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் தன்வசப்படுத்தினார். மூன்று சுற்றுகளிலும் ஆதிக்கம் செலுத்திய நடால் இந்த போட்டியில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்று பதக்கத்தை தன்வசப்படுத்தியிருந்தார்.