தருமபுரி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் நூலகம், வாழை, கனி, மூலிகை தோட்டம் மற்றும் சிறுவர் பூங்கா அமைத்து அலுவலகத்தை சுற்றுலா தலமாக மாற்றி வரும் வருவாய் துறை ஊழியர்கள்.

 


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் புதிய வருவாய் வட்டமாக கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காரிமங்கலம் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் காலியிடங்கள் ஏராளமாக இருந்து வந்தது. இந்த காலியிடங்களில் முட்புதர்கள், சீமை கருவேல மரம் உள்ளிட்ட இயற்கைக்கு கேடு விளைவிக்கின்ற வகையில் சுற்றுச்சூழல் அமைந்திருந்தது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் காரிமங்கலம் வட்டாட்சியராக சுகுமார் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட வட்டாட்சியர் சுகுமார், வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள இடங்களில் இருந்த முட்புதர் மற்றும் சீமை கருவேலன்களை அகற்றினார்.  தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக இடத்தின் எல்லையை அறிந்து சுற்றிலும் கம்பி வேலிகளை அமைத்து, இந்த காலியிடங்களை இயற்கை சூழலாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டார். 



 

இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக வட்டாட்சியர் அலுவலகம் காலி இடத்தில் மா, பலா, நாவல், புங்கன், அத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை நட்டு பராமரிக்க தொடங்கினார். மேலும் ஏராளமான இடங்கள் இருந்ததால் இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனையின் படி காலியிடம் முழுவதையும் கனிவயல், மூலிகை தோட்டம், வாழை தோட்டம், மலர் வனம் உள்ளிட்டவற்றை வைத்து பராமரிக்க முயற்சியில் ஈடுபட்டார். இதில் ஒரு புறம் வாழைத் தோட்டத்தை அமைத்து மொந்தன், ரஸ்தாலி, கற்பூரவாழை, ஏலக்கி உள்ளிட்ட 15 வகையான வாழை மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மறுபுறம் ராஜா தோட்டம் அமைத்து அதில் 30-க்கும் மேற்பட்ட வகையிலான ரோஜா செடிகளை நட்டு மலர்வணமும் அமைத்துள்ளார். 



 

அன்றாட வாழ்க்கையில் மூலிகைச் செடிகளின் மகத்துவத்தை நாம் மறந்து வரும் நிலையில் மக்களுக்கு மூலிகை செடி மற்றும் அதன் மருத்துவ பயன்களை தெரியப்படுத்துகின்ற வகையில், மூலிகைச் செடிகளை அதிகப்படியாக நட்டு வைத்துள்ளார். இதில் சாதாரணமாக நட்டு வைத்தால், பலன் இருக்காது என்பதால், தொட்டிகள் அமைத்து அந்த தொட்டிகளில் மூலிகைச் செடிகளை வைத்து அந்த செடியின் பெயரை தொட்டியின் மீது எழுதி வைத்துள்ளார். இதில் சுக்கு, சித்தரத்தை, பல்வலிப்பூண்டு, கற்பூரவல்லி, செங்காம்பு வெற்றிலை, பிரண்டை, இன்சுலின், திப்பிலி உள்ளிட்ட ஏராளமான மூலிகை செடிகளை மேட்டூர் பகுதியில் இருந்து வாங்கி வந்து நட்டு வைத்து பராமரித்து வருகிறார். 

 

மேலும் இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் நாம் ஒரு மரம் வைத்தால், அந்த மரத்தில் உள்ள பழங்களை உண்டு, பறவைகள் வெளியே செல்கின்ற பொழுது அதன் எச்சத்தின் மூலம், 100 மரங்கள் வளரும் என்பதால், பறவைகளுக்கு தேவையான கொய்யா, அத்தி, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை வைத்துள்ளார். அதேபோல் ஒருபுறம் பழத்தோட்ட அமைத்து, அதில் டிராகன் ஃபுரூட், வாட்டர் ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான கன்றுகளை நட்டு, கனக வயல் அமைத்து, இயற்கை சூழலை அலுவலகம் சுற்றிலும் உருவாக்கி வருகிறார். இந்த மரக்கன்றுகளை பராமரிப்பது, தண்ணீர் விடுவதற்காக,  காரிமங்கலம் வருவாய் வட்டத்தில் பணியாற்றுகின்ற கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், அலுவலகத்தில் பணிபுரிகின்ற இளநிலை, முதுநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மன மகிழ்வோடு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மரக்கன்றுகளுக்கு தேவையான தண்ணீரை குறைந்தளவில் கொடுப்பதற்காக, சொட்டு நீர் அமைத்து சிறிய துளைகளின் மூலம் தினமும் தண்ணீர் விட்டு இந்த செடிகளை பராமரித்து வருகின்றனர். 



 

அதேபோல் அலுவலகம் வருகின்ற மக்கள் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பங்கள் உள்ளிட்டவற்றை கொடுக்க வரும் பொழுது காத்திருக்கின்ற சூழல் இருந்து வருகிறது. இதனால் இந்த பொது மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் இந்த இயற்கை சூழலோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வருபவர்கள் இந்த இடங்களை சுற்றி பார்க்கலாம், மூலிகையின் மகத்துவத்தை அறிந்து கொள்ள முடியும், பழங்களை உண்டு மகிழலாம். இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் ஆர்வமோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல் பொதுமக்கள் வருகின்ற பொழுது குழந்தைகளை அழைத்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதனால் இந்த குழந்தைகளும் இந்த பகுதியில் மகிழ்ச்சியோடு பொழுதை கழிப்பதற்கு அலுவலகத்திற்கு முன்பு சிறிய பசும் புல்வெளியோடு அமைந்த பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வருகின்ற குழந்தைகளை பராமரிப்பதற்கு பெற்றோர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே முதல் முறையாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தப் பகுதிகளில் போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்திக் கொள்கின்ற இளைஞர்கள், இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களது பொழுதை இனிமையாகக் கழிப்பதற்கு இயற்கை சூழலோடு இணைந்து இருக்கலாம். அதையும் தாண்டி புத்தகங்களை எடுத்து வாசிப்பதற்கு ஏதுவாக இந்த நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை என்றால், அலுவலர்கள் அனைவருக்கும் அதிகமான வேலைப்பளு இருக்கின்ற சூழலிலும், காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார் முயற்சியால் வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிலிருந்து இணைந்து தங்களது பணி சுமைக்கு இடையிலும், இந்த பூங்காவை பராமரித்து வருகின்றனர்.



 

மேலும் அலுவலகத்தில் பணி சுமை அதிகமாக இருக்கின்ற சூழலில் இந்த பூங்காவிற்குள் நுழைந்து இதனை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டால், தங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் இது போன்ற உள்ள காலியிடங்களை இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றினால் நம் இயற்கையை பாதுகாக்க முடியும், அலுவலக இடங்களை சுற்றிலும், ஒரு இயற்கை சூழலையும் உருவாக்க முடியும் என வட்டாட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.