ஆறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ஆந்தலாஜி மாடர்ன் லவ் சென்னை. இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இந்தத் தொடரை ஒருங்கிணைத்திருக்கிறார். மாடர்ன் லவ் இன்று முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. இந்தத் தொடரின் இரண்டாவது எபிசோடாக இடம்பெற்றிருப்பது ’இமைகள்’ பாலாஜி தரணீதரன் எழுதி பாலாஜி சக்திவேல் இதை இயக்கியுள்ளார்.


தேவியிடம்(டி.ஜே பானு) நித்யா (அஷோக் செல்வன்) தனது காதலைச் சொல்வதில் தொடங்குகிறது இமைகள்.காதலை நித்யா சொல்லிய அடுத்த நொடி நீங்கள் கவனிப்பது தேவியின் கண்களைதான். காதலிக்கத் தொடங்கிய சில நாட்களில் தேவி தன்னைப் பற்றிய உண்மையை ஒன்றை நித்யாவிடம் சொல்கிறார். சிறிது சிறிதாக பார்வையை மொத்தமாக இழந்து வருபவர் தேவி. ஒரு கட்டத்திற்கு மேல் அவரது பார்வை மொத்தமாக போய்விடும். இந்த உண்மையை தனது காதலன் நித்யாவிடம் தெரிவிக்கிறார் தேவி.


இந்த உண்மைத் தெரிந்தபின் அவரை ஏற்றுக்கொண்டு அவரை திருமணம் செய்கிறார் நித்யா. தனக்கு பார்வை மொத்தமாக போய்விடுவதற்குள் நிறைய இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிறார் தேவி. காலம் செல்கிறது.. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. தேவியின்  பார்வை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. இந்த குறைபாட்டுடன் தேவி எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தேவிக்கும் நித்யாவிற்குமான உறவு ஆகியவை மிக அழகாக எழுதப்பட்டு இயக்கப்பட்டிருக்கின்றன.


குறிப்பாக தேவியாக நடித்திருக்கும் டி ஜே பானு எந்த மிக  சின்ன சின்ன நுட்பங்களை சேர்ப்பதன் மூலம் தேவி கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சிரமங்களை நமக்கு கடத்துகிறார்.தனது கண்களுக்கு மை பூசும் ஒரு காட்சியில் தேவியின் பார்வை எப்படிப்பட்டது என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். மேலும் நித்யா உடம்பு சரியில்லை என்று தேவியை வீட்டுக்கு வரவைக்கும் காட்சியில், ஒரு கணவன் மனைவிக்கு இடையிலான அழகான தருணத்தை உருவாக்கியிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல ரொமாண்டிக் மெலடியை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.


இமைகள் படம் மிக அழகாக எழுதி இயக்கப்பட்டிருக்கிறது. தேவியின் பிரச்சனை அவரது கணவர் நித்யாவிற்கு புதிய சவால்களை புதிய குழப்பங்களை தருகின்றன. தேவியை அபரிமிதமாக நேசிப்பவர் நித்யா. ஆனால் எதார்த்தத்தில் நித்யா தனது மனைவியின் இந்தப் பிரச்சனையை அவருடன் சேர்ந்து எப்படி எதிர்கொள்வார் என்பதற்கான ஒரு சின்னத் தருணம் கூட இல்லாதது கதையின் போக்கில் விடுபட்டதாக தோன்ற வைக்கிறது. 


சுருக்கமாக சொன்னால் காதலுக்கு கண்கள் இல்லையென்று சொல்வார்கள் இல்லையா? அதுபோல் கண்கள் இல்லாத ஒருவரை  காதல் எப்படி எதிர்கொள்ளும் என்பதே இமைகள் படத்தின் கதை என்று சொல்லலாம்.