குடிசையில் இருந்து கோபுரத்துக்கு உயர்ந்த பைக் ரேஸர் கெவின் கண்ணன். இவர் அடிப்படையில் ஒரு பைக் மெக்கானிக். அதிலிருந்து இன்று பல உயரங்களைத் தொட்டுள்ளார் கெவின்.
தனது வளர்ச்சி குறித்து கெவின் அளித்த பேட்டி..
நான் சிறுவயதிலிருந்தே பைக் ரேஸ் மீது ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் என் குடும்பம் வறுமையான குடும்பம். பள்ளி முடிந்து மெக்கானிக் கடையில் வேலை பார்ப்பேன். அங்கிருந்த உரிமையாளர் பைக் ரேஸில் ஆர்வம் கொண்டவர். அவரும் ரேஸ் ஓட்டுவார். அவரோடு அப்பப்ப ட்ராக்குக்கு போவேன். அப்போது ஒருதடவை ரேஸ் ட்ராக் போகும்போது அவருடைய மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் கொடுத்த வாய்ப்பு தான் என்னை இன்று சாம்பியனாக உருவாக்கியுள்ளது.
8 வருடங்களுக்கு முன்னர் ரேஸ் பற்றி யாருக்கும் நிறைய தெரியவில்லை. அந்த வேளையில் பணத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு பைக் ஷோரூமில் வேலை பார்த்து ரேஸ் கத்துகிட்டேன். ரேஸ் என்ட்ரி கட்டணம் கட்டுவேன். அப்புறம் எனக்கு சிலர் உதவியும் செய்தனர். ரேசிங் சூட், பைக் என எதையுமே வாங்க முடியாது. ஆனால் ரேஸ் ட்ராக்கில் ஓட்டணும்கிற எண்ணம் மட்டுமே இருந்தது.
அப்படியிருந்தும் செலவு செய்ய முடியவில்லை. அப்போது ஜெகன் குமார் என்ற ரைடரிடம் உதவி கேட்டேன். அவர் தான் என்னை கைதூக்கிவிட்டார். தன்னம்பிக்கையும், நல்ல மனிதர்களின் உதவியும் தான் என்னை தூக்கிவிட்டது. மற்றவர்களின் விமர்சனத்தை நான் நல்ல மாதிரியாகவே எடுத்துக் கொள்வேன். எங்க அம்மா எப்போதுமே என்னை ஊக்குவித்தார். முதலில் அம்மாவிடம் ரேஸிங் பற்றி சொல்லவே பயந்தேன். அப்புறம் அம்மாவிடம் சொன்ன பின்னர் அவர் என்னை இன்றளவும் ஊக்குவித்து வருகிறார். நான் ட்ராஃபி ஜெயிச்சு அம்மாகிட்ட கொடுப்பேன். அதை வாங்கிக் கொள்வதில் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம்.
ரேஸ், வீலிங் பற்றி மக்கள் மத்தியில் பயம் இருக்கு. தெருவில் ஓட்டுபவர்களையும் ஊடகங்கள் பைக் ரேஸர் எனக் கூறுகிறது. அவர்களை அப்படிச் சொல்வது தான் அவர்களுக்கு ஊக்கமாகிறது. அவர்கள் காசு இல்லாததால் ரேஸிங் வர முடியாமல் ஹாபிக்கு ஓட்டுகிறோம் எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தெருவில் ஓட்டுவதால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து, மக்களுக்கும் ஆபத்து. சாம்பியானாக வேண்டும் என்றால் ரேஸ் டிராக்கில் ஓட்டலாம். இல்லாவிட்டால் ஆசைக்கு தான் ஓட்டுகிறோம் என்றால் ரேஸிங் டிராக்குக்கு வந்து என்ட்ரி ஃபீ கட்டி ஓட்டிக் கொள்ளலாம். உங்கள் திறமையை பைக் சார்ந்த மேனுபேக்சரர்ஸ் பார்த்து வாய்ப்பு கொடுத்து பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் ஆசையைக் கூட டிராக்கில் ஓட்டி அதை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். என்னால், அது மாதிரியான ஆசை உள்ளவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்க முடியும். அனால் ரேஸர் சூட், என்ட்ரி ஃபீ எல்லாவற்றையும் அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மற்ற விளையாட்டைப் போல் பைக் ரேஸிலும் காயம் அடையும் ஆபத்து உண்டு. ஆனால் அதையெல்லாம் கடந்து தான் விளையாட வேண்டும்.அஜித் சார் தான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். அஜித் சார் என்னை வாழ்த்தியுள்ளார், பாராட்டியுள்ளார். அதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
இவ்வாறு கெவின் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.