ஐ.பி.எல். தொடரின் 25வது ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், கொல்கத்தா அணிக்காக ஆரன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர் ஓப்பனிங் களமிறங்கினர். தொடக்கமே அதிர்ச்சியாக அமைய, அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது.
கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக விளையாடி 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். சுனில் நரைன் சொற்ப ரன்களுக்கு வெளியேற, நிதிஷ் ராணா களத்தில் நின்று அரை சதம் கடந்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவரை அடுத்து களமிறங்கிய ரஸலும் அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருக்கிறது கொல்கத்தா அணி.
சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை நடராஜன் 4 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜென்சன், ஜகதீஷா சுசித் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கனே வில்லியம்சன் களமிறங்கினர். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்த அபிஷேக் சர்மா 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் தொடர்ச்சியாக கேப்டன் கனே வில்லியம்சனும் 17 ரன்களில் நடையைக்கட்ட, பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.
இவருக்கு பக்கபலமாக மார்கரம் அவ்வபோது பந்துகளை பௌண்டரிக்கு விரட்டினார். அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி,21 பந்துகளில் 4 பௌண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து அரைசதம் கடந்தார். ஹைதராபாத் அணியின் எண்ணிக்கை 133 ஆக இருந்தபோது தூக்கி ஆடிய திரிபாதி, 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்த திரிபாதி ரசல் வீசிய 15 வது ஓவரில் அவுட்டானார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்கரம் 31 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு 18 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், மார்கரம் கம்மின்ஸ் வீசிய 18 வது ஓவரில் ஒரு பௌண்டரி, இரண்டு சிக்ஸர் அடித்து ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார்.
ஹைதராபாத் அணி சார்பில் மார்கரம் 68 ரன்களுடனும், பூரன் 5 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக ரசல் 2 விக்கெட்களும், கம்மின்ஸ் விக்கெட்டும் எடுத்து இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்