இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் அமைப்பு சேர்ந்து நடத்தும் கிரிக்கெட் தொடர், கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப். இந்த தொடர் இப்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. உலகெங்கிலும் இருந்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற சோமர்செட் மற்றும் சர்ரே அணிகளுக்கு இடையேயான போட்டியில், சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின், ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த ஆண்டு, அஷ்வின் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார்.
டாஸ் வென்ற சோமர்செட் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த இன்னிங்ஸில் அஷ்வின் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய சோமர்செட் கேப்டன், பேட்ஸ்மென் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில், இந்த அணி 429 ரன்களை எடுத்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய சர்ரே அணி, 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போட்டியை வெல்லும் முனைப்பில், இரண்டாவது இன்னிங்ஸை விளையாட களமிறங்கிய சோமர்செட் அணி பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். 15 ஓவர்கள் வீசிய அவர், வெறும் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால், அந்த அணி 69 ரன்களுக்குள் சுருண்டது.
இரண்டாவது இன்னிங்சில் சோமர்செட் அணியை ரன் எடுக்க விடாமல் தடுத்ததால், தோல்வியில் இருந்து மீண்ட சர்ரே அணி, போட்டியை டிரா செய்தது.
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வரும் அஷ்வினுக்கு, நேற்றைய பெளலிங் ஃபிகர், அவரது கரியரில் சிறந்த 5+ விக்கெட் ரெக்கார்டாக அமைந்தது. கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் அஷ்வினின் சில ரெக்கார்டுகளை பார்ப்போம்!
இதுவரை 10 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள அஷ்வின், 61 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தியா அல்லாத வெளிநாடுகளில் விளையாடப்படும் முதல் தர கிரிக்கெட்டில், அஷ்வினின் இரண்டாவது சிறந்த பெளலிங் ஸ்பெல்லும் இதுவே. அவரது சிறந்து இன்னிங்ஸ் என சொல்லப்படுவது, 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்ததே அவரது சிறந்து ரெக்கார்டு.
கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 ஆண்டுகளுக்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் ஓப்பனிங் ஸ்பெல்லை போடுவது இதுவே முதல் முறை. அதுமட்டுமின்றி, ஓப்பனிங் ஸ்பெல்லை தொடங்கிய ஒரு சுழற்பந்துவீச்சாளருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால் கிடைக்கவில்லை. ஆனால், இன்னிங்ஸின் ஓப்பனிங் ஸ்பெல்லை வீசி, அஷ்வின் 3 முறை 5 விக்கெட் ஹால் எடுத்து அசத்தியுள்ளார்.
இதுவரை 10 கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ள அஷ்வின், சிறந்த ஆல்-ரவுண்டர் பெர்ஃபாமென்சையும் பதிவு செய்துள்ளார். 10 போட்டிகளில், 553 ரன்கள், 61 விக்கெட்டுகள் என ஆல்-டைம் சிறந்த ஆல்-ரவுண்டர் பர்ஃபாமென்ஸ்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.