கஜகிஸ்தான் நாட்டில் கோஸ்நோவ் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பல்வேறு பிரிவுகளில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். இதில் 200 மீட்டர் ஒப்பந்தயத்தின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் தனலட்சுமி சேகர் மற்றும் டூட்டி சந்த் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
இந்தப் போட்டியில் பந்தய தூரத்தை 22.89 விநாடிகளில் கடந்து தனலட்சுமி சேகர் தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தன்னுடைய சிறப்பான நேரத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். எனினும் அவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சாதனையை நேரமான 22.82 என்பதை நூலிழையில் தவறவிட்டார். 2002ஆம் ஆண்டு சரஸ்வதி சாஹா என்பவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 22.82 விநாடிகள் கடந்து தேசிய சாதனைப் படைத்தார். அந்த நேரத்தை முறியடிக்க தனலட்சுமி தவறிவிட்டார். எனினும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 23 விநாடிகளுக்குள் முடித்த 3வது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். சரஸ்வாதி சாஹா(22.82), ஹீமா தாஸ்(22.82) ஆகியோருக்கு பிறகு தனலட்சுமி சேகர் 22.89 விநாடிகளில் 200 மீட்டர் பந்தயத்தை கடந்துள்ளார்.
20 வயதான தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை தடகள விளையாட்டு உலகில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் அடுத்து பிர்மிங்ஹாமில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். அதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தையில் தனலட்சுமி சேகர் பங்கேற்க உள்ளார். இவர் ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய தொடர் ஓட்ட பிரிவு அணியில் இடம்பிடித்திருந்தார். திருச்சி மாவட்டம் கூடுர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர், தாய் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். தன்னுடைய வறுமையை விளையாட்டு மூலம் தனலட்சுமி வென்று வருகிறார். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தனலட்சுமி சேகர் 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்திலும் பங்கேற்க உள்ளார். இந்த இரண்டிலும் இவர் பதக்கம் வெல்வார் என்று அதிக நம்பிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்