ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை சேர்த்தது. 


 


எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் மோர்கன் மற்றும் திரிபாதியின் ஆட்டத்தால் கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா  பேட்டிங்கின் போது சுனில் நரேனின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். அப்போது சுனில் நரேன் அடித்த பந்தை பஞ்சாப் வீரர் ரவி பிஷ்னோய் சிறப்பாக ஓடி வந்து டைவ் அடித்து பிடித்தார். இந்த அற்புதமான கேட்சை பஞ்சாப் வீரர்களே சற்று வியந்து பார்த்தனர். 


 






இந்நிலையில் இணையத்தில் தற்போது அந்த கேட்ச் மிகவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் கேட்ச்கள் மிகவும் சிறப்பானதாக உள்ளது. வாவ் வாவ்….” என்று பதிவிட்டுள்ளார். 






 


மேலும் ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த கேட்சை வெகுவாக பாராட்டி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்டிங், பந்துவீச்சை விட ஃபில்டிங் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே ஜடேஜாவின் கேட்ச், ரன் அவுட் மற்றும் இம்ரான் தாஹீரின் ரன் அவுட் மிகவும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது பிஷ்னோயின் கேட்சும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.