ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் பொறுமையான ஆட்டத்தை துவங்கினர்.




20 பந்தில் 19 ரன்கள் எடுத்த ராகுல், கம்மின்ஸ் பந்து வீச்சில் சுனில் நரேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், 34 பந்தில் 31 ரன்கள் எடுத்த அகர்வாலும் சுனில் நரேன் பந்து வீச்சில் ராகுல் திருபாதியிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சந்தித்த முதல் பந்திலேயே ‛டக்’ அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த தீபக் ஹோடாவும் 1 ரன்னில் ஆட்டமிழக்க கடும் நெருக்கடிக்கு ஆளானது பஞ்சாப் அணி.




அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 19 பந்தில் 19 ரன்களும், ஹென்றிக்ஸ் 3 பந்தில் 3 ரன்களும் எடுத்து பணியை முடித்துக் கொண்டனர் . கடந்த முறை சிறப்பாக ஆடிய தமிழக வீரர் ஷாரூக் கான் 14 பந்தில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்க மற்றொருபுறம் பொறுமையாக ஆடிய கிறிஸ் ஜோர்டன் 3 சிக்ஸர்கள் அடித்து 18 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.




இதனால் 100 ரன்களை எட்டுமா என்கிற சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருந்த பஞ்சாப் அணி, இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக கொல்கத்தாவின் பிரதீஷ் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கம்மின்ஸ் மற்றும் நரேன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். எளிய இலக்குடன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்கமே சோகமாய் அமைந்தது. துவக்கவீரர் சுப்மன் கில் 8 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான ரானா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த திரிபாதி பொறுமையாக ஆட அவருக்கு துணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரேன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.




இருப்பினும் திரிபாதி உடன் கூட்டணி சேர்ந்த கேப்டன் மோர்கன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் அதிரடி காட்ட முயன்ற திரிபாதி 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மோர்கன்-ஆண்ட்ரூ ரூசல் ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. எதிர்பாராத விதமாக ரூசல் 10 ரன்னில் ஆட்டமிழக்க, மோர்கனுடன் கூட்டு சேர்ந்த தினேஷ் கார்த்திக், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.





கேப்டன் மோர்கன் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 2 சிக்சர்கள் அடங்கும். அவருக்கு ஒத்துழைத்த தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி, 16.4 ஓவர்களில் 126 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹென்றிக்ஸ், சமி, அர்ஸ்தீப் சிங், ஹோடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். 20 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் முன்கூட்டியே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதில் கேப்டன் மோர்கனுக்கு முக்கிய பங்கு உண்டு.