இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே பிரதானமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக கிரிக்கெட் போட்டிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை போல பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.


கபடி, கால்பந்து, கூடைப்பந்து ஆகிய போட்டிகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டைப் போல பிரிமீயர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள கிராமங்கள்தோறும் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் கபடி போட்டித் தொடருக்கு ப்ரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.


இந்த நிலையில், இதுவரை ப்ரோ கபடி லீக் தொடர் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (முதல் சீசன்) :


2014ம் ஆண்டு நடைபெற்ற முதல் ப்ரோ கபடிலீக் தொடரின் சாம்பியனாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் யு மும்பா அணிக்கு எதிராக ஆடி அபாரமாக வெற்றி பெற்றது.


யு மும்பா ( 2015)


முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட யு மும்பா அணி இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்ட யு மும்பா அணி 36-30 என்ற கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.


பாட்னா பைரட்ஸ் ( 2016)


2016ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய யு மும்பா அணியை 31-28 என்ற கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணி வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் மட்டும் ரோகிதகுமார் 7 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். அந்த தொடரில் பர்தீப்நார்வல் சிறப்பாக ஆடி 116 புள்ளிகளை பெற்றார்.


பாட்னா பைரட்ஸ் (2017)


நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாட்னா பைரட்ஸ் அணி இந்த முறையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 37-29 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் பர்தீப்நார்வல் 16 புள்ளிகளை பெற்று அசத்தினார்.


பாட்னா பைரட்ஸ் (2018)


இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடரில் புதியதாக 5 அணிகள் இடம்பெற்றன. ஆனால், இந்த முறையும் நடப்பு சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த முறை இறுதிப்போட்டிக்கு பாட்னா பைரட்ஸ் அணியுடன் குஜராத் ஜியான்ட்ஸ் மோதினர். ஆனாலும், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி 55 – 38 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அதாவது ஹாட்ரிக் சாம்பியன் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது. இந்த தொடரில் முதன்முறையாக பாட்னா அணி 1050 புள்ளிகளை கடந்து அசத்தியுள்ளது.


பெங்களூரு புல்ஸ் ( 2018)


இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்த தொடரில் பெங்களூர் புல்ஸ் – குஜராத் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இந்த போட்டியில் 38-33 என்ற கணக்கில் குஜராத்தை வீழ்த்தி முதன்முறையாக பெங்களூரு வெற்றி பெற்றது.


பெங்கால் வாரியர்ஸ் ( 7வது சீசன்)


7வது சீசனில் இறுதிப்போட்டிக்கே இதுவரை முன்னேறாத பெங்கால் வாரியர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. அந்த போட்டியில் 39-34 என்ற கணக்கில் அபாரமாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


தபாங் டெல்லி (8வது சீசன்)


கடந்தாண்டு நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் அணியுடன் டெல்லி தபாங் அணி மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 புள்ளிகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. 37-36 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி டெல்லி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.