பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட நடிகர் கார்த்தி நடிகர்கள் கமல் ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.


வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்:


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான படம் பொன்னியின் செல்வன். 150 நாட்களில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், சரத் குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா ஆகியோர் படத்தின் தூண்களாக அமைந்திருந்தனர். கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் 80 கோடி வசூல் செய்த பொன்னியின் செல்வன், அடுத்த 5 நாட்களுக்குள் 200 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


 






கூடிய விரைவில் இப்படத்தின் வசூல் 300 கோடியை தாண்டி விடும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சமீபத்தில் கூட, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் படத்தை பார்த்துவிட்டு “வெற்றி வேல் வீர வேல்” என ஆனந்தமாக கோஷமிட்டனர். ’


கலவையான விமர்சனங்கள்:


கல்கியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், அந்த நாவலை படித்தவர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிலர், ”புத்தகத்தில் உள்ளது போல் படத்தில் நிறைய காட்சிகள் இல்லை, புத்தகத்தில் உள்ள கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப படத்தில் வாய்ஸ் செட்டாகவில்லை” என குறை கூறினாலும், ஒரு சிலர் “படம் நன்றாக உள்ளது” என தம்ப்ஸ்-அப் கொடுத்தனர். எது எப்படியிருப்பினும், தமிழ் மக்களால் படம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. 



 


ரஜினி-கமலுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி


பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக வந்து, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர் கார்த்தி. பொன்னியின் செல்வன் ரிலீஸிற்கு பின்னர் படத்தை பார்த்த நடிகர் ரஜினி, படக்குழுவுக்கு பாரட்டு தெரிவித்தார். இது குறித்து நடிகர் ஜெயம் ரவியும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.



இதையடுத்து நடிகர் கமல் ஹாசனும்,  ஜாஸ் சினிமாஸில் பொன்னியின் செல்வன் படத்தை விக்ரம் மற்றும் கார்த்தியுடன் நேற்று கண்டுகளித்தார். அதன் பிறகு நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து, அதற்கு ரசிகர்களின் வரவேற்ப்பை பார்த்தும் தனக்கு மிகவும் பெறுமையாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களைப் பார்த்து தனக்கு பொறாமையாக உள்ளதாகவும் கூறினார். இந்த சந்திப்பிற்கு பிறகு நடிகர் கார்த்தி, ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


 






அதில், கமல் குறித்து அவர் கூறியிருப்பதாவது, சினிமாவில் பெரிய உயரத்தை தொடுவதற்கு நடிகர் கமல் என்றுமே தனக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சினிமாவில் உள்ள சக நடிகர்களை கமல் அவர்கள் தனக்கு மதிக்க கற்றுக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து கூறியுள்ள அவர், ”உங்களிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு எப்போதுமே எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார். மேலும், “பொன்னியின் செல்வன் படத்திற்கு நீங்கள் பாரட்டு தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார். இதற்காக, நடிகர்கள் கமலுக்கும் ரஜினிக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.