Tamil Thalaivas : கடந்த ப்ரோ கபடி லீக் சீசன் 9-இல் அரையிறுதி வரை சென்று அசத்திய தமிழ் தலைவாஸ் அணி, இந்தாண்டு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இந்த ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 ல் மட்டுமே வெற்றிபெற்று, தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதனால், 12 அணிகள் இடம்பெற்றிருந்த புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி வெறும் 13 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தோல்விக்கான காரணம் என்ன..?
தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் தாங்கள் களமிறங்கிய முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்று அனைவரது எதிர்பார்ப்பை தூண்டியது. அதன்பிறகு தோற்ற 7 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி கைகளில் இருந்தும் தோல்வியை மட்டும் சந்தித்தது. அதற்கு காரணம், கடைசி நிமிட பதற்றம்.
போட்டி தொடங்கியது முதலே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செய்து விளையாட தொடங்கும். விறுவிறுவென அடுத்தடுத்து பாயிண்ட்ஸ்களை குவிக்க தொடங்கும். முதல் பாதியில் நல்ல எண்ணிக்கையிலான பாயிண்ட்ஸ் கணக்குகளை பெறும் தமிழ் தலைவாஸ், இரண்டாம் பாதியிலிருந்து இறுதி நொடி வரை பதட்டமடைந்து தோல்வியை மட்டும் கைகளில் எடுத்து கொள்கிறது. கடைசியாக நடந்த தமிழ் தலைவாஸ் அணி - பெங்களூர் புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் இதுவே நடந்தது. கடைசி 6 நிமிடங்கள் வரை பெங்களூர் புல்ஸ் அணியை விட முன்னிலை பாயிண்ட்ஸ்களில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி, எதிரணிக்கு போனஸ் வழங்குதல், ரெய்டில் அவசரம், ஆல் அவுட் என பாயிண்ட்ஸ்களில் வெற்றியை தவறவிட்டது.
தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு எப்போது..?
பெயரளவில் தமிழ் தலைவாஸ் என்று வைத்தாலும், விளையாடும் 7 வீரர்களில் பெரும்பாலும் அண்டை மாநில வீரர்களே விளையாடுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் எப்போது ஆடும் 7ல் முழுமையாக களமிறங்குவார் என தமிழ்நாட்டை ரசிகர்கள் தினமும் கோரிக்கையுடன் கூடிய கேள்விகளை வைத்து வருகின்றன.
உதாரணத்திற்கு, தமிழ் தலைவாஸ் அணியின் கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாசாணமுத்து லக்ஷ்ணன் அதிகபட்சமாக ஏலத்திற்கு போன மூன்றாவது வீரர் ஆவார். ஆனால், அவரை இன்று வரை தமிழ் தலைவாஸ் அணி ஒரு போட்டியில் கூட களமிறக்கவில்லை. மாசாணமுத்து லக்ஷ்ணனை தொடர்ந்து, செல்வமணி, சதீஸ் கண்ணன் என்ற தமிழக வீரர்களும் விளையாடுவதில்லை. அரிதாகவே ஏதேனும் ஒரு போட்டிகளில் அவ்வபோது வருவதும், போவதுமாக உள்ளனர்.
கடந்த ஆண்டு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் : அஜிங்க்யா அசோக் பவார் (ரைடர்), சாகர் (பாதுகாப்பாளர்), ஹிமான்ஷு (டிஃபெண்டர்), எம். அபிஷேக் (டிஃபெண்டர்), சாஹல் (டிஃபெண்டர்), ஆஷிஷ் (டிஃபெண்டர்), மோஹித் (டிஃபெண்டர்), நரேந்தர் (ரைடர்), ஹிமான்ஷு (ரைடர்), ஜதின் (ரைடர்)
கடந்த ஆண்டு ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணியால் எடுக்கப்பட்ட வீரர்கள்:
வீரர்கள் | பொசிஸன் | விலை |
அமீர்ஹோசைன் பஸ்தாமி | டிபெண்டர் | 30 லட்சம் |
முகமதுரேசா கபௌத்ரஹங்கி | டிபெண்டர் | 19.20 லட்சம் |
ஹிமான்ஷு சிங் | ரைடர் | 25 லட்சம் |
செல்வமணி | ரைடர் | 13 லட்சம் |
மாசாணமுத்து லக்ஷ்ணன் | ரைடர் | 31.60 லட்சம் |
சதீஷ் கண்ணன் | ரைடர் | 19.10 லட்சம் |