சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கு.க செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். திமுகவின் தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 


திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் கு.க செல்வம். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவிற்கு பிறகு மாவட்ட செயலளார் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த பதவி இவருக்கு வழங்கப்படவில்லை.


பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அப்போது திமுகவையும் விமர்சித்து பேசி வந்தார். பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-பாஜகவில் இணைந்தார்.


ஆனால் அங்கும் அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் பாஜகவிலும் அதிருப்தியில் இருந்தார். இதனால் மீண்டும் திமுகவில் இணைய எண்ணம் கொண்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். பின் மீண்டும் அவருக்கு  தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.


அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “


வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம், மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று எண்ணும்போது நெஞ்சம் விம்முகிறது. அவரது பேச்சுதான் பலருக்கும் புரிந்துகொள்ளக் கடினமாக இருக்குமே தவிர, அவரது வெள்ளை உள்ளம் பழகும் எவர்க்கும் கற்கண்டாய் இனிக்கும். இனி அந்தக் கற்கண்டைக் கழகத் தோழர்கள் காண இயலாது எனும் எண்ணம் வருத்துகிறது.


சென்னை மேற்குப் பகுதியில் கழகம் வளர்த்த செயல்வீரர், தென்சென்னை மாவட்டக் கழகத் துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர் எனக் கழகத்துக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட பிள்ளை மனம் கொண்ட கழக வீரர் அவர்!


எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, தலைவர் கலைஞரின் அன்புத் தம்பிகளில் ஒருவராக விளங்கினார். அதுநாள் முதலே என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பைச் செலுத்தி வந்தவர் கு.க.செல்வம். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றினார். நான் வெளியூர் செல்லும்போது பலசமயம் என்னுடன் அவரும் வருவார்.


அண்மையில் சிறிது காலம் தடம் மாறிச் சென்றாலும், உடனே மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதுதான் கு.க.செல்வம். அவர் சென்றபோதே திரும்ப வந்துவிடுவார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.


கு.க.செல்வம் அவர்களின் மறைவு என்பது அவரது குடும்பத்துக்கும் கழகத்துக்கும் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும். என்னை நானே தேற்றிக் கொண்டு, அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.