புரோ கபடி லீக்:
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இதில், கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியுடன் மோதியது. இதில், அசத்தலாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி தங்களது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. அதன்படி, 31 - 42 என்ற அடிப்படையில் தபாங் அணியை வீழ்த்தியது. அதேபோல், கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி.
இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. பின்னர், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் அதிரடியாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 36- 38 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இப்படி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அந்த அணி, பின்னர் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
ஒரு புள்ளி வித்தியாசத்தில்:
பின்னர் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் யு மும்பா அணியிடம் தோல்வி, அதேபோல்,டிசம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற பாட்னா பைரேட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணி பின்னர் டிசம்பர் 23 ஆம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர் கொண்டது.
இந்த போட்டியில் 24 புள்ளிகளை பெற்றது தமிழ் தலைவாஸ் அணி. மறுபுறம் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 25 புள்ளிகளை பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களி சோகத்தில் ஆழ்த்தியது.
பின்னர் அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடைபெற்ற போட்டியிலும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தது. அதன்படி பெங்களூரு புல்ஸ் அணி 38 புள்ளிகள் பெற்றது அதேநேரம் 37 புள்ளிகளை தமிழ் தலைவாஸ் அணி பெற்றது. இந்த போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிக்கு அருகில் சென்று தோல்வி அடைந்தது. ஆனால் இனி வரும் போட்டிகளில் நிச்சயம் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.