இந்தாண்டு முழுவதும் தொடரப்போகும் போர்:
காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் கிட்டத்தட்ட 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி பிரச்சினையை தொடங்கியிருந்தாலும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், காசாவை நிலைகுலைய வைத்தது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 21,672 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 35 பேர் உயிரிழந்தனர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பரபரப்பை கிளப்பிய இஸ்ரேல் ராணுவம்:
இந்தாண்டு முழுவதும் போர் நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் ராணுவமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், "நீடிக்கப்போகும் போருக்கு ஏற்ப துருப்புக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பணிகள் இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் போர் தொடரும் என்ற புரிதலுடன் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்" என்றார்.
இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைபாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஹமாஸ் தாக்குதலை கண்டித்துள்ள அதே நேரத்தில், இரு நாட்டு கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
"நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து பிரதமருடன் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. கடல்வழி போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலை தெரிவித்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவி அளிக்கப்படும். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீக்கிரமாக மீட்டெடுப்பதற்கு ஆதரவாக இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்" என எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா கடந்த வாரம் வாக்களித்தது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 153 நாடுகளும் எதிராக 10 நாடுகளும் வாக்களித்தன. தீர்மானத்தில் வாக்களிக்காமல் 23 நாடுகள் புறக்கணித்தன.
இதையும் படிக்க: நிலநடுக்கத்தை தொடர்ந்து மிரட்டிய சுனாமி! இந்தியர்கள் சிக்கினார்களா? உதவி எண்களை அறிவித்த இந்திய தூதரகம்