Pro Kabaddi 2022:

  ப்ரோ கபடி லீக் போட்டியின் 9வது சீசனில் விளையாடிவரும் புனேரி பல்டன் அணி,  தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி  இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது. இது புனேரி பல்டன் அணிக்கும் புனேரி பல்டன் அணி ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தினை அளித்துள்ளது. 


பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணியும் பலமான புனேரி பல்டன் அணியும் மோதிக்கொண்டன. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ”அக்ரசிவ் மோடிலேயே” விளையாடிவந்தனர். போட்டியின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 21 புள்ளிகளும் புனேரி பல்டன்ஸ் அணி 15 புள்ளிகளும் எடுத்து இருந்தது. 


போட்டியின் இரண்டாவது பாதி, முதல் பாதியைவிடவும் மிகவும் பரபரப்பாகவே இரு அணி வீரர்களும் விளையாடி வந்தனர். ஆனால் அதற்கு பலன் புனேரி பல்டன் அணிக்குத்தான் கிடைத்தது. பரபரப்போடு விளையாடிய தமிழ் தலைவாஸ் அணியின் வீரர்கள் கொஞ்சம் தேவையில்லாத ஆட்டத்தால், புனேரி அணிக்கு புள்ளிகளைக் கொடுத்ததோடு, ஆல் - அவுட் ஆனது. 


இதனால், புனேரி அணி தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகளுக்கு அருகில் நெருங்கியது. போட்டிக்கு 12 நிமிடங்கள் மீதம் இருக்கும் போது இரு அணிகளும் 24 புள்ளிகள் எடுத்து இருந்தது.  அதேபோல், போட்டிக்கு 6 நிமிடங்கள் மீதம் இருக்கும் போது இரு அணிகளும் 29 புள்ளிகள் எடுத்து இருந்தது போட்டியின் பரபரப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றது. போட்டியின் கடைசி 5 நிமிடங்கள் இருக்கும்போது இரு அணிகளும் 30 புள்ளிகள் எடுத்து இருந்த போது, டைம் - அவுட் வழங்கப்பட்டது. 






கடைசி 3 நிமிடங்கள் இருக்கும்போது, தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் ஒரு முறை ஆல் - அவுட் ஆனது. இதனால் புனே அணி 36 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 31 புள்ளிகளும் எடுத்து பின் தங்கி இருந்தது. அதன் பின்னர் போட்டியில் இருந்து மீளவே மீளாத தமிழ் தலைவாஸ் அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளது. போட்டி முடிவில் புனேரி அணி 39 புள்ளிகள் எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 37 புள்ளிகள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 17ஆம் தேதி புனேரி அணி பலமான ஜெய்ப்பூர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.