ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்களை வைத்து எழுதப்படும் படங்களுக்கும் எடுக்கப்படும் படங்களுக்கும் பஞ்சமே இல்லை. அப்படி எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள படங்களுள் மார்வல் மற்றும் டிசி (DC) படங்களும் அடங்கும். மார்வல் படங்களில், ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன் போன்ற ஹீரோக்கள் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு பிரபலமான ஹீரோக்ககள்தான் பேட் மேன், சூப்பர் மேன், ஆக்குவா மேன், வொண்டர் வுமன் போன்றவர்கள். இவர்களுள் மிகவும் பிரபலமான மற்றும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஹீரோவாக கருதப்படுபவர் சூப்பர் மேன். இந்த கதாப்பாத்திரத்தில் இதுவரை பலர் நடித்திருந்தாலும், ரசிகர்களால் சூப்பர் மேனாக கொண்டாடப்பட்டவர் ஹென்றி கேவில். இவர், இதற்கடுத்து வரும் படங்களில் தான் சூப்பர் மேனாக நடிக்கப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார்.
சூப்பர் மேன் குறித்த படம்:
ஹாலிவுட் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவர் ஜேம்ஸ் கன். இவர், மார்வல் படங்களான கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தினை இயக்கியிருந்தார். இவரை டிசி நிறுவனம் துணை தலைவராக நியமித்து விட்டது. இதையடுத்து, இவர் ஒரு சூப்பர் மேன் படத்தினை இயக்கவுள்ளார். இப்படம், சூப்பர் மேனின் இளமைக் காலத்தை வைத்து எழுதப்பட்ட கதையாக இருக்கும் என முன்னர் கூறியிருந்தார் ஜேம்ஸ் கன்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்த அவர், சூப்பர் மேன் படம் குறித்த தகவலை அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடவுள்ளதாகவும், சூப்பர் மேனின் இளமைக் காலத்தின் வகையில் இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த படத்தின் சூப்பர் மேன் கதாப்பாத்திரத்தில் ஹென்றி நடிக்கப்போவதில்லை எனவும் இது குறித்து அந்த நடிகரிடம் பேச்சு வார்த்தை நடத்திவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
கண் கலங்க வைத்த ஹென்றியின் பதிவு!
ஜேம்ஸ் கன்னின் பதிவையடுத்து, சூப்பர் மேன் ஹீரோ ஹென்றி கன்னும் ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளது பின் வருமாறு,
“அனைவருக்கும் இது ஒரு சோகமான செய்திதான். சூப்பர் மேன் பட இயக்குனர்களான ஜேம்ஸ் மற்றும் பீட்டரை சந்தித்தேன். நான் இனி சூப்பர் மேனாக நடிக்கப்போவதில்லை. இது அனைவராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி என நன்றாகவே எனக்கு புரிகிறது. ஆனால் மாற்றம் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அதுதான் வாழ்க்கை. ஜேம்ஸ் மற்றும் பீட்டர் புதிதாக ஒரு யூனிவர்ஸை உருவாக்க இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்து என்னுடன் இருந்த அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிறிது நாட்களுக்கு சோகமாக இருந்து கொள்ளலாம் ஆனால் சூப்பர் மேன் நம்முடன்தான் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள். அவர் நம்க்கு எடுத்துக்காட்டாக நிகழ்த்தியவையும் நம்முடன்தான் இருக்கின்றன” என்று தனது பதிவில் உருக்கமான கூறியிருக்கிறார் ஹென்ரி. இந்த பதிவையடுத்து டிசி மற்றும் சூப்பர் மேன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.