Portugal vs France, EURO 2024: யூரோ கால்பந்தாட்ட போட்டியின் காலிறுதியில், போர்ச்சுகல் அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


காலிறுதியில் போர்ச்சுகல் தோல்வி:


யூரோ கால்பந்தாட்ட போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஹாம்பர்க்கில் உள்ள வோக்ஸ்பார்க்ஸ்டேடியனில் நடந்த காலிறுதிப் போட்டியில், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் கிலியம் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டிக்கு ஒதுக்கபட்ட நேரத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமனில் முடிந்தது. தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியாளரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. போர்ச்சுகல் யூரோ கால்பந்தாட்ட போட்டியில் இருந்து வெளியேறியது.


பெனால்டி ஷூட் அவுட்டில் நடந்தது என்ன?


பெனால்ட் ஷூட் அவுட் முறையில் பிரான்ஸ் வீரர் அவுஸ்மேன் தனது வாய்ப்பை தவறவிடாமல் கோல் ஆக்கினார். தொடர்ந்து ரொனால்டோவும் தனது வாய்ப்பில் கோல் அடித்து பதிலடி தந்தார். இரண்டாவது வாய்ப்பிலும் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் கோல் அடிக்க, புள்ளிகள் 2-2 என நீடித்தது. மூன்றாவது வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் ஜுல்ஸ் கோல் அடிக்க, போர்ச்சுகல் வீரர் ஃபெலிக்ஸ் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நான்கு மற்றும் ஐந்தாவது வாய்ப்பிலும், பிரான்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்க, 5-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதியில் அந்த அணி ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு, ஜார்ஜியா மற்றும் ஸ்லோவேனியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஆட்டங்களில் போர்ச்சுகல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






ரொனால்டோ ரசிகர்கள் சோகம்:


நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இதுவாகும். நடப்பாண்டிற்கான யூரோ கால்பந்தாட்ட போட்டி தொடங்குவதற்கு முன்பாக போர்ச்சுகல் அல்லது ஃபிரான்ஸ் அணி தான் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட நிலையில், ரொனால்டொ தலைமையிலான அணி அந்த வாய்ப்பை இழந்துள்ளது. இது ரொனால்டோ ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டி, நடைபெற்ற அதே தேதியில் நேற்று போர்ச்சுகல் மற்றும் ஃபிரான்ஸ் அணிகள் மோதின. அந்த அரையிறுதியில் 1-0 என்ற கணக்கில் ஃபிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர்ச்சுகல் அணி மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது.  முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையிலும், ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, காலிறுதியில் மொராக்கோவிடம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.