இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் பிரபல பக்தி பாடகர் கிருஷ்ண தாஸின் பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


பக்தி பரவசத்தில் விராட் கோலி:


இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், ஒருநாள் போட்டியில் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது. 2வது ஒருநாள் போட்டியின் போதும் வழக்கம் போலவே விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அவரது ரசிகர்கள் ஏகக்கடுப்பில் இருக்கின்றனர். ஆனால், விராட் கோலியோ அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் தன் மனைவியுடன் பஜனை நிகழ்ச்சிக்குக் கிளம்பி விட்டார். பிரபல அமெரிக்கப் பாடகரான கிருஷ்ண தாஸ் ஹிந்து பஜனை பாடல்கள் பாடுவதில் பிரபலமானவர். அவரது பாஜனை நிகழ்ச்சி தற்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் தான் மனைவியுடன் கலந்துகொண்டிருக்கிறார் விராட் கோலி. ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் லண்டனில் உள்ள யூனியன் சேப்பல் பகுதியில் தான் இந்த கீர்த்தனை நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஹனுமன் தாஸ் விராட் கோலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.




யார் இந்த கிருஷ்ண தாஸ்:


1947ம் ஆண்டு மே 31ம் தேதி பிறந்தவரான கிருஷ்ண தாஸின் இயற்பெயர் ஜெஃப்ரே காகெல். கிருஷ்ணர் மிது அதிக பக்தி கொண்ட இவர் 1996 முதல் 17 பக்தி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். 2013ம் ஆண்டு நடைபெற்ற கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் பாடியதோடு, கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். 1970ல் இந்தியாவிற்கு ஜெஃப்ரே வாக வந்தவர் நீம் கரோலி பாபாவால் கிருஷ்ண தாஸாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 




கோலிக்கு சிக்கல்:


விராட்கோலி தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சனை ஃபார்ம் அவுட் தான். கடந்த 1வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால் இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 3 பவுண்டரிகளை விராட் கோலி விளாச அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டாரோ என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்த வேளையிலேயே, 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். உலக கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியின் பின்னால் நின்று அவரை சப்போர்ட் செய்தாலும், வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் இருந்து அவரை கழற்றிவிட்டிருக்கிறது இந்திய அணி. இது இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.