புதுச்சேரியில் டி.ஜி.பி. பெயரில் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது. புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகேச பாரதி என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவரது செல்போன் வாட்ஸ் அப்க்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், தான் புதுச்சேரி காவல் துறை டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிறிஸ்ணியா என்றும், ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தொண்டு நிறுவனத்திற்கு நிதி உதவி செய்யும்படி கூறப்பட்டு இருந்தது.
அத்துடன் நிதி உதவி அளிக்க ஒரு வெப்சைட்டின் லிங்க் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த மெசேஜ் மீது பேராசிரியர் முருகேச பாரதிக்கு நம்பிக்கை இல்லை. இதுதொடர்பாக சில போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது அவருக்கு மெசேஜ் வந்த வாட்ஸ்-அப் எண்ணை அனுப்பி, காவல் துறை டி.ஜி.பி.யின் எண்ணா? என கேட்டார். அது காவல் துறை டி.ஜி.பி.யின் செல்போன் நம்பர் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் முருகேச பாரதி, இந்த மோசடி முயற்சி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ஆய்வாளர் மனோஜ், உதவி காவல் ஆய்வாளர் சந்தோஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த எண் யாருடையது? வேறு யாருக்கும் இதுபோல் தகவல் அனுப்பி பணம் பெறப்பட்டுள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோசடியாக தகவல் அனுப்பிய நபரை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகிறார்கள். புதுச்சேரி காவல்துறை டிஜிபியின் பெயரில் வாட்ஸ் அப் மூலம் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் சமீப நாட்களாக அதிக அளவில் ஆன்லைன் நூதன மோசடி நடைபெற்று வருகிறது. நாளுக்குநாள் சைபர் கிரைம் வழக்குகள் அதிக அளவில் வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாளுக்குநாள் புதிய தொழில்நுட்பம் மூலம் மக்களை இணைக்கும் கருவியாக இணையதளம் இருக்கிறது. இருந்தாலும் மக்களின் கவனக் குறைவாலும், போதுமான விழிப்புணர்வின்றியும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. இதை குறைப்பதற்காக புதுச்சேரி மாநிலம் முழுவதும் போலீசார் சைபர் குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலி இணையதளம், செயலிகள், ஆன்லைன் விளையாட்டுகள், பரிசு கூப்பன், வங்கி மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் மூலம் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக நிறைய புகார்கள் வருவதால் இதற்கான நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்