ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்., அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ்., மகன்கள் ரவீந்திரநாத் எம்பி., மற்றும் ஜெய பிரதீப் ஆகியோரையும் கட்சியிலிருந்து நீக்கினார். 

ஒரு கட்சியின் உயரிய பொறுப்பில் இருந்தவர் நீக்கப்பட்டதும், அவரது குடும்பத்தார் நீக்கப்பட்டதும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், உண்மையில் யார் அதிமுகவிற்கு உரிமை கோருவது என்கிற குழப்பம் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது.



இருவேறு சட்டப்பிரிவுகளை கூறி, கட்சி தங்களுக்கு தான் சொந்தம் என்கிறார்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ். விவகாரம் நீதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் சென்றிருக்கிறது. முடிவு எது வேண்டுமானாலும் நடக்கலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதெல்லாம் ஒருபுறமிருக்க, தற்போதை சூழலை வைத்து பார்க்கும் போது, ஓபிஎஸ் .,தரப்பு தான் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. 

பெரும்பான்மை என்கிற அடிப்படையில் ஓபிஎஸ் தான் பலவீனமாக இருப்பதாக தெரிகிறது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, தான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் இளையமகன் ஜெய பிரதீப் வருத்தம் தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் போட்டு வருகிறார். 

அதன் படி, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அகத்திய முனிவரின் அறிவுரைகளை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு...



 

‛‛

ஸ்ரீ அகத்தியர் அறிவுரை:



"பொறுத்திரு"! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் மகான்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.



ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாவத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால் சூழ்ச்சிகள் துரோகத்தினால் ஏற்படும் துன்பம் நமது மனதை பாதிக்காது.

எண்ணம் போல் வாழ்வு,’’


என்று , அந்த பதிவில் ஜெய பிரதீப் கூறியுள்ளார். ஒரு புறம் சட்ட போராட்டம், மறுபுறம் அறிக்கைப் போர், மற்றொரு புறம் பேட்டி தாக்குதல் என நகர்ந்து கொண்டிருக்கும் அதிமுக தலைமை விவகாரத்தில், இடையிடையே இது போன்ற பேஸ்புக் கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.