பிரேசில் கால்பந்து வீரர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவரது சிறுநீரகம், இதயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பிரேசில் கால்பந்து வீரர் பீலே (வயது 82) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியது. அவர் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.


அவருக்கு கீமோதெரப்பி சிகிச்சையில் பலன் அளிக்காததால் தற்போது நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.


"பீலே கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் உடல்நிலை சீராக உள்ளது" என்றும்  அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக பீலே இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தங்கியிருந்த பீலேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


பீலேவுக்கு புற்றுநோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் 82 வயதான அவர் "சிறுநீரக மற்றும் இதய செயலிழப்பு" தொடர்பான கவனிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தனர். செப்டம்பர் 2021 இல் பீலேவுக்கு பெருங்குடல் கட்டி அகற்றப்பட்டது.


கால்பந்தின் முடிசூடா மன்னன் பிரேசிலில் 1940-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார் பீலே. கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்குபவர். கால்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப்படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு கால்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் போட்டவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும்  தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.


அவர் மொத்தம் 92 ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார். மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரே கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.


களம் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, சிறப்பாக பந்தை வலைக்குள் தள்ளும் முறை, லாவகமாக இரண்டு முதல் மூன்று தற்காப்பு வீரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தி இலக்கு தவறாமல் பந்தை வலைக்குள் தள்ளும் தந்திரம் என இவரிடம் ஏகப்பட்ட திறமைகள் இருந்தன.