தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதி மொழிக் குழு ஆய்வு குழுவினர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சேலம் வருகை தந்தனர். அரசு உறுதி மொழிக் குழு ஆய்வு கூட்டம் குழுவின் தலைவர் உதய சூரியன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 2021-2023 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக்குழு சேலம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு உறுதி மொழிகள் மீது தொடர்புடைய துறைகளின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம், மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோவில், கோனூர் சென்றாய பெருமாள் கோவில், திப்பம்பட்டி மேட்டூர் உபரி நீர் திட்டம், மேட்டூர் 16 கண் பாலம், கொண்டப்பநாயக்கன்பட்டி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர், சேலம் ஆவின் பால் பண்ணை, சேலம் மாநகராட்சி நெத்திமேடு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் என பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள், பல்வேறு துறையில் உள்ள அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு குழுவின் தலைவர் உதயசூரியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, சேலம் மாவட்டத்திற்கு 221 உறுதிமொழிகள். இதில் 90 உறுதிமொழிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தெந்த பணிகள் முடிவு பெற்றுள்ளது. எதனை பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறித்து சட்டப்பேரவையில் எடுத்துரைக்கப்பட உள்ளதாக கூறினர். சேலம் மேட்டூர் அணையில் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பின்போது, மண் அரிப்பு அதிகமாகியுள்ளதால், ஆயிரம் மீட்டர்கள் தூரத்திற்கு புதிய காங்கிரட் தளம் அமைக்க ஏழு கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மதிப்பீடு செய்யவும் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் நூறு ஏரியை நிரப்பும் திட்டத்தில் 79 ஏரிகள் மட்டுமே உள்ளது. மீதமுள்ளவை அனைத்தும் குளம், குட்டைகளாகும். எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த ஊரில் 27 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். மேட்டூரில் ஒரு ஏரி மட்டுமே நிரம்பியுள்ளது. மேலும் 22 ஏரிகளுக்கு கொண்டு செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி, சரபங்கா உபரிநீர் திட்டம் மூலம் விடுபட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல 673 கோடி ரூபாய் ரூபாய் மதிப்பில் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.



தன்னைவிட மற்றவர்களுக்கு செய்து பேர் எடுக்க வேண்டும் என்று நினைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும், தனக்கு மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடைபெற்றது. பாதாளசாக்கடை திட்டத்தில் பணி துவங்கி இடத்திலிருந்து முடித்துக் கொண்டு சென்றால்தான் பணி நிறைவுபெறும், ஆனால் அனைத்து இடங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டால் பணிகள் சரிவர இருக்காது. சரியான ஒப்பந்ததாரர், அதிகாரி மற்றும் சரியான ஆட்சியாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பாதாள சாக்கடை பணிகள் சரியாக நடைபெறும். தற்பொழுது இது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார்.