ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி 48வது இடத்தை பிடித்தது. கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 19 நபர்கள் மட்டுமே அந்த தொடரில் பங்கேற்றனர். ஆனால், 2021ம் ஆண்டு பாராலிம்பிக்கில் இந்தியா மொத்தமாக 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்த பாராலிம்பிக்கிற்கு முன்பாக இந்தியா பாராலிம்பிக் போட்டிகளில் மொத்தமாக பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையே 12 தான் ஆகும்.
2021ம் ஆண்டு பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க விவரம் :
சுமித் அன்டில் :
தடகளப் போட்டியான ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் எப்6 பிரிவில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பிரமோத் பகத் :
ஆண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் எஸ்.எல்.3 பிரிவில் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
கிருஷ்ணா நாகர்:
பாராலிம்பிக் போட்டிகளுக்கான இறுதிநாளில் ஆண்களுக்கான பேட்மிண்டன் எஸ்.எச். 6 பிரிவில் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவின் பாராலிம்பிக் தொடரை சிறப்பாக முடித்து வைத்தார். வெற்றி பெறுவதற்கு உயரம் ஒரு தடையில்லை என்றும் பலருக்கும் நிரூபித்தும் காட்டியுள்ளார்.
மணிஷ் நார்வால் :
துப்பாக்கி சுடும் பி4 கலப்பு பிரிவினருக்கு இடையேயான 50 மீட்டர் பிரிவு போட்டியில் தங்கப்பதக்கத்தை மணிஷ் நார்வால் கைப்பற்றினார்.
அவனி லேகாரா :
12 வயதிலே விபத்தில் கால்களை இழந்த அவனி லேகாரா, மனம் தளராமல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக இளம் வயதில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்தார். ஆர் 2 பிரிவில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அவனி லேகா, ஆர் 8 பெண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று புதிய சாதனையை படைத்தார்.
யோகேஷ் கத்துனியா :
ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் எப்56 பிரிவில் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
நிஷாத்குமார் :
ஆண்களுக்கான டி47 உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
மாரியப்பன் தங்கவேலு:
கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு. இந்த போட்டியிலும் தங்கம் வெல்வதற்காக கடுமையாக போராடினார். ஆனால், மழை காரணமாக ஆண்களுக்கான டி47 உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தமிழகத்தில் இருந்து பாராலிம்பிக்கில் இரு பதக்கங்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் மாரியப்பன் படைத்தார்.
பிரவீன்குமார் :
டி64 பிரிவில் இங்கிலாந்து வீரருடன் தங்கம் வெல்லும் இறுதிச்சுற்றில் கடுமையாக போராடிய இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.18 வயதே ஆன பிரவீன்குமார்தான் இந்தியாவிற்காக பாராலிம்பிக்கில் இளம் வயதில் பதக்கத்தை கைப்பற்றிய இந்தியர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.
தேவேந்திர ஜஜ்ஹாரியா:
பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரராக வலம் வரும் தேவேந்திர ஜஜ்ஹாரியா ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் எப்.46 பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். அவர் ஏற்கனவே பாராலிம்பிக் போட்டிகளில் இரு பதக்கங்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாஸ் யத்திராஜ்:
பேட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் எஸ்.எல்.4 பிரிவில் பங்கேற்ற சுகாஸ் யத்திராஜ் இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். சுகாஸ் யத்திராஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளியாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக முன்னேறிய சுகாஸ் யத்திராஜ் வெள்ளி நாயகனாகவும் இந்த வெற்றி மூலம் மிளிர்கிறார்.
சிங்கராஜ் அதானா:
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பி4 கலப்பு 50 மீட்டர் பிரிவில் பங்கேற்ற சிங்கராஜ் அதானா வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இதுமட்டுமின்றி, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி இரு பதக்கங்களை கைப்பற்றியுள்ளார்.
பவினா படேல்:
டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற பவினா படேல் இறுதிப்போட்டி வரை முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பவினா படேல் தனது அயராத முயற்சியால் டேபிள் டென்னிசில் முதல் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஹர்விந்தர் சிங் :
வில்வித்தை போட்டியில் பங்கேற்ற ஹர்விந்தர் சிங் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
சரத்குமார் :
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் டி63 பிரிவில் பங்கேற்ற சரத்குமார் அந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
சுந்தர்சிங் குர்ஜார்:
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் எப்46 பிரிவில் பங்கேற்ற சுந்தர்சிங் குர்ஜார் தனது திறமையால் வெண்கலப் பதக்கத்தை இந்த போட்டியில் கைப்பற்றினார்.
மனோஜ் சர்கார் :
ஆண்களுக்கான ஒற்றையர் எஸ்.எல்.3 பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற மனோஜ் சர்கார் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியாவிற்கு இந்த பாராலிம்பிக் தொடர் என்பது ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது. மேலும், இவர்களின் வெற்றி நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.