பாகிஸ்தானின் டச்சு ஹாக்கி பயிற்சியாளர் சீக்பிரைட் ஐக்மேன் கடந்த 12 மாதங்களாக சம்பளம் கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் விளையாட்டு உலகில் பாகிஸ்தான் நாட்டின் நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது. 


பதவி விலகிய பயிற்சியாளர்


கடந்த ஆண்டு பாகிஸ்தான் தேசிய அணியில் பயிற்சியாளராக இணைந்த ஐக்மேன், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ததாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் இருந்து எய்க்மேன் தாயகம் திரும்பிய போதிலும், அவர் தனது நிலுவைத் தொகைக்காக காத்திருந்ததால் அந்த பதவியை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் எந்த முடிவும் எட்டப்படாததால் அவர் தற்போது பதவி விலக முடிவு செய்துள்ளார்.



நியமிக்கப்பட்ட புதிய பயிற்சியாளார்


ஐக்மேன் தனது ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பிற்கு (PHF) அனுப்பிய நேரத்தில், மற்றொரு டச்சு பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் பாகிஸ்தானுக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஆசிய ஜூனியர் கோப்பைக்காக தேசிய ஜூனியர் அணியுடன் மஸ்கட் புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓல்ட்மன்ஸ் லாகூருக்கு வந்து கான்டினென்டல் நிகழ்விற்கான ஜூனியர் அணிக்கு பொறுப்பேற்றார் என்பதை PHF உறுதிப்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்: Yaadhum Oore Yaavarum Kelir: கதை திருட்டு புகாரில் சிக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ .. விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி


சம்பளம் வராததற்கு காரணம் என்ன?


இனி பயிற்சியாளராக செயல்பட உள்ள, ஓல்ட்மேனின் சம்பளம் கொடுக்கப்படுமா? முன்னாள் பணிபுரிந்த ஐக்மேன்-இன் நிலுவைத் தொகைகள் தீர்க்கப்படுமா என்பது குறித்து PHF பேசவில்லை. பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் (PSB) டச்சு பயிற்சியாளரின் சம்பளத்தை வழங்குவதாக கூறியதை அடுத்து, PHF ஆல் ஐக்மேன் பணியமர்த்தப்பட்டார். தேர்தல்கள் மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்கள் தொடர்பாக PHF மற்றும் PSB க்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள PSF அமைப்பு, PHFக்கு நிதியளிப்பதை நிறுத்தும் சூழ்நிலைக்கு வழிவகுத்தது.



முன்பிருந்தே கூறிவந்த ஐக்மேன்


"நாங்கள் ஓமனுக்கு அனுப்பிய குழுவிற்கும் கூட தனியார் நன்கொடையாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் பணம் திரட்டப்பட்டது" என்று PHF அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நான்கு மாதங்கள் முன்னர் டான் பத்திரிக்கைக்கு பிரத்யேக பேட்டி அளித்த முன்னாள் பயிற்சியாளர் ஐக்மென் பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசி இருந்தார். "பாகிஸ்தான் அணியின் செயல்திறனை மேம்படுத்த நான் உறுதிமொழி எடுத்துள்ளேன், ஆனால் எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. எங்கள் சேமிப்பின் மூலம்தான் தற்போது எனது குடும்ப செலவுகள் பூர்த்தியாகின்றன. பிப்ரவரியில் பணம் செலுத்தவில்லை என்றால், நான் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை," என்று கூறியிருந்தார்.