தஞ்சாவூா்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை நேற்று ஆய்வு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவ-மாணவிகள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தஞ்சை வட்டார போக்கு வரத்து அலுவலக த்திற்குட்பட்ட இடங்களை சேர்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 265 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர் ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் ஏறிச்சென்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா? அவசரகால வழி கதவு உள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? தீயணைப்பான் கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை ஆகிய 3 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் அந்தந்த பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 3 இடங்களிலும் 710 பள்ளி வானங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில் சிறுசிறு குறைகள் வாகனத்தில் கண்டறியப்பட்டாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்த பிறகே இயக்க அனுமதிக்கப்படும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். டிரைவர்கள் மிகவும் கவனமுடன் பஸ்கள் இயக்க வேண்டும். மாணவர்கள் பத்திரமாக பஸ்களில் ஏறி, பத்திரமாக இறங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ? சரியான முறையில் இயங்குகிறதா என பரிசோதிப்பது எப்படி ? என்பது குறித்து டிரைவர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். ஆய்வின் போது தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத், நகர டி.எஸ்.பி., ராஜா, முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தெய்வபாலன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், தாசில்தார் சக்திவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமலாதங்கத்தாய் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.