தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.
தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய மரணம்
தமிழ்நாட்டில் விழுப்புரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வாரம் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையில் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய ஒழிப்பு வேட்டை நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இரு மாவட்டங்களில் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராய மரணத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையை அரசு அறிவித்தது.
அதேசமயம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்தனர். தொடர்ந்து கள்ளச்சாராய மரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆளுநர் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதாக தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆளுநரை சந்தித்த பாஜகவினர்
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது கள்ளச்சாரயம் விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது, கள்ளச்சாராய மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும். பொதுவாக அமைச்சர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும்போது, சட்டத்தை காக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு. அடுத்த 15 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முதல்வரிடம் விரைவில் வெள்ளை அறிக்கை பாஜக சார்பில் வழங்கப்படும் என தெரிவித்தார்.