வாள்வீச்சுப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய ஒலிம்பிக் விராங்கனை பவானி தேவி தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னித்து விடுங்கள் என்று உருக்கமாக இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அவரைத் தேற்றும் வகையில் பதிலளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


ஒலிம்பிக் களத்தில் பவானி:


டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். அவர் தனது முதல் சுற்றில் துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஜிசியை 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தார். இதன் மூலம், இரண்டாவது சுற்றான டேபிள் 32 சுற்றுக்கு முன்னேறினார். இதனால், அவர் மீதான தேசத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. 


டேபிள் 32 சுற்றில் அவர் பிரான்ஸ் நாட்டு வீராங்கனை மனோன் ப்ரூனெட்டை எதிர்கொண்டார். மனோன், கடந்த 2016ல் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி சுற்று வரையிலும் சென்றனவர். அதனால், போட்டியின் தொடக்கம் முதலே பெர்னெட் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. இறுதியில் 7-15 என்ற புள்ளிகள் கணக்கில் பெர்னெட் வெற்றிபெற்றார். 7 புள்ளிகளை பெற்ற பவானிதேவி தோல்வியடைந்தார். டேபிள் 32 சுற்றின் தோல்வியால், பவானிதேவி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.






'ஐ ஆம் சாரி' ட்வீட்:


இதனையடுத்து பவானி தேவி தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் உணர்வுப்பூர்வமான உற்சாகம் பெருகிய நாள். நான் முதல் போட்டியில் நாடியா அஜிஸியை 15க்கு 3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றேன். வாள்வீச்சில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிக் கணக்கை துவங்கிய முதல் இந்தியர் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளேன்.


ஆனால், 2வது ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள வீராங்கன மனோன் ப்ரூனட்டிடம் தோல்வியடைந்துள்ளேன். நான் எனது முழு முயற்சியையும் செலுத்தினேன். ஆனாலும் என்னால் வெற்றி பெற முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். 


எல்லா முடிவிலும் ஒரு தொடக்கம் இருக்கும். நான் எனது முயற்சியைத் தொடர்வேன். பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன். எனது தேசத்தை பெருமைப் படுத்துவேன். எனக்காக துணை நின்ற ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.


தேற்றிய பிரதமர்:


இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அவருடைய பதிவு பவானிதேவியை தேற்றி உற்சாகப்படுத்துவது போல் அமைந்துள்ளது.


"பவானி தேவி நீங்கள் உங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். அதுதான் முக்கியம். வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஒரு அங்கமே. உங்களின் பங்களிப்பு குறித்து இந்திய தேசம் பெருமை கொள்கிறது. நம் நாட்டு குடிமக்களுக்கு நீங்கள் நிச்சயமாக ஒரு உந்து சக்தி" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.