ஒலிம்பிக் போட்டி:


33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், மல்யுத்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கேக்கில் நேற்று தொடங்கியது. அந்த வகையில் இந்த போட்டி 21 ஆம் தேதி அதாவது நாளை வரை நடைபெறுகிறது.



ஆண்களில் பிரீ ஸ்டைல், கிரேக்கோ- ரோமன் பெண்களில் பிரீ ஸ்டைல் ஆகியவற்றில் மொத்தம் 18 எடை பிரிவுகளில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


வினேஷ் போகத் தகுதி:


முன்னதாக, இந்த போட்டிக்கான இந்திய அணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில், மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் சாம்பியனான வினேஷ் போகத் (50 கிலோ) சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 


இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்ற 3 போட்டிகளில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் வினேஷ் போகத். இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.