இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் ரவி தஹியா ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் தகுதி சுற்றில் போட்டியில் இருந்து வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். இந்த இரண்டு மல்யுத்த வீரர்களும் தேசிய அணி நடத்திய தேர்வு போட்டியில் தோல்வியடைந்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிராக பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனையுடன் டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ பிரிவு அரையிறுதியில் ரோஹித் குமாரிடம், பஜ்ரங் புனியா மோசமான தோல்வியை சந்தித்தார். இந்தப் போட்டியில் புனியாவை 1-9 என்ற கணக்கில் வீழ்த்தி ரோஹித் குமார் வெற்றி பெற்றார். இதேபோல், மற்றொரு மல்யுத்த வீரரான ரவீந்தருக்கு எதிராக பஜ்ரங் முன்பு ஒரு போட்டியில் விளையாடி, அதிலும் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பாதியிலேயே வெளியேறிய பஜ்ரங் புனியா: 


இந்த அரையிறுதி தோல்விக்கு பிறகு பஜ்ரங் கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) அதிகாரிகள் பூனியாவின் ஊக்க மருந்து மாதிரிகளை சேகரிக்க முயன்றனர். அப்போது பஜ்ரங் புனியா மூன்றாவது-நான்காவது இடத்திற்கான போட்டியில் கூட விளையாடாமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பஜ்ரங் புனியா ரஷ்யாவில் பயிற்சி எடுத்திருந்தார். ஆனால் அதனால் அவருக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை.


ரவி தஹியாவும் ஏமாற்றம்: 


டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தஹியா, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிட்தார். நீண்ட காலமாக காயத்தில் இருந்த அவர், காயத்திற்குப் பிறகு மல்யுத்த களத்திற்கு திரும்பினார். இதையடுத்து, ரவி தஹியா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இவரை 13-14 என்ற கணக்கில் அமான் தோற்கடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் அமான் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 


பஜ்ரங் புனியாவை கடந்த ஆண்டு நடைப்பெற்ற பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றார். அன்றைய போட்டியில் கனடாவின் எல். மெக்லீனை 9-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். காமன்வெல்த் போட்டியில் பஜ்ரங் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். 


பஜ்ரங் புனியாவுடனான அரையிறுதி போட்டி வெற்றிக்கு பிறகு, இறுதிப் போட்டியில் சுஜித் கல்கலுக்கு எதிராக ரோஹித் தோல்வியை சந்தித்தார். இதன்மூலம், சுஜித் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். இப்போது அவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் 65 கிலோ பிரிவில் இடம் பிடிக்க பெற முயற்சிக்கிறார். ரோஹித் இப்போது ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியா அணிக்காக விளையாடினார். 57 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் அமான் பங்கேற்கிறார்.


பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இறுதிப் பட்டியலில் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் மட்டுமே இந்தியா இதுவரை தகுதி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற மல்யுத்த வீரர்களின் பட்டியலைப் பார்த்தால், ஜெய்தீப் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), தீபக் நெஹ்ரா (97 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆசிய தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியைப் பார்த்தால், அதில் அமன் செஹ்ராவத் (57 கிலோ), சுஜித் கல்கல் (65 கிலோ), ஜெய்தீப் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), தீபக் நெஹ்ரா (97 கிலோ), சுமித் மாலிக் ஆகியோர் உள்ளனர்.