பாரீஸ் ஒலிம்பிக் 2024:


கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. இதில், 30 தங்க பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 29 தங்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 18 தங்கங்களுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.


இந்தியாவை பொறுத்தவரை ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் நான்கு வெண்கலங்களுடன் இந்தியா 64 வது இடத்தில் உள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தைச் தட்டிச் சென்றது.


இதன் மூலம் கடந்த 1971 ஆம் ஆண்டுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்ற சாதனையை படைத்தது இந்திய ஹாக்கி அணி. இந்த போட்டியில் எதிரனியினரின் கோல்களை தடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் கோல் கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஷ். இந் நிலையில் தன்னுடைய கணவர் வீட்டிற்கு வரும் பொழுது அவருக்கு பிடித்த சுவையான கேரள பாரம்பரிய உணவை சமைத்துக்கொடுப்பேன் என்று அவருடைய மனைவி அனீஷ்யா ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.


கேரள பாரம்பரிய உணவு சமைத்து கொடுப்பேன்:


இது தொடர்பாக அவர் பேசுகையில்,"நான் அவருடைய மனைவி மட்டும் அல்ல தீவிர ரசிகையும் கூட. அவர் சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். இதனால் ஒரு ரசிகையாக அவரை மிஸ் செய்வேன். அதே நேரம் அவருடைய மனைவியாக இருப்பதால் அவர் என்னுடன் இனி நேரத்தை செலவு செய்வதை நினைத்து மகிழ்ச்சியாக உணர்கிறேன்.


ஒரு நேரத்தில் வருத்தமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.நான் அவருக்கு பாரம்பரிய கேரள உணவு, சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் சமைப்பேன். அவர் அதை மிகவும் விரும்புகிறார், அவர் அதை விரும்பி சாப்பிடுவார் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் இன்னும் கொண்டாட்டங்களைத் திட்டமிடவில்லை, ஆனால் அவரை வரவேற்க நிறைய பேர் இருப்பார்கள்.


பெரிய தருணம்:


அவரது சகோதரர் கனடாவிலிருந்து தனது குடும்பத்துடன் இங்கு வந்திருக்கிறார். மொத்த குடும்பமும் இங்கு கூடியிருக்கிறது. இது எங்களுக்கு ஒரு பெரிய தருணம்"என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "அவரது கவனம் இதுவரை பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் எதிர்கால திட்டங்களைப் பற்றி அவர் சரியான நேரத்தில் அறிவிப்பார்" என்று கூறினார் அனீஷ்யா ஸ்ரீஜேஷ்.