Vinesh Phogat: வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு மனு, விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம்:
ஒலிம்பிக்கில் மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால், போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100கிராம் கூடுதலாக இருப்பதாக கூறி, ஒலிம்பிக் சம்மேளனம் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்தது. ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இந்த பிரச்னை, நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. வினேஷ் போகத்திற்கு நியாயம் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
வினேஷ் போகத்தின் மேல்முறையீடு ஏற்பு:
இந்நிலையில் தான், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS) ஏற்றுக்கொண்டது. ஆரம்பத்தில், பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்குமாறு, போகத் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்ட் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்ததால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனது இரண்டாவது முறையீட்டில், வினேஷ் CAS-ஐ ஒரு கூட்டு-வெள்ளிப் பதக்கம் வென்றவராக அறிவிக்குமாறு கோரினார். அந்த மனுவை விளையாட்டை நடுவர் நீதிமன்றம் ஏற்றது. அதன் மீதான மதிப்பாய்வு சாதகமாக முடிந்தால், வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேல்முறையீடு மீது இன்று விசாரணை:
வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான பாரிஸ் பார் சார்பு வழக்கறிஞர்களான ஜோயல் மோன்லூயிஸ், எஸ்டெல் இவனோவா, ஹப்பைன் எஸ்டெல் கிம் மற்றும் சார்லஸ் ஆம்சன் ஆகியோர் CAS விசாரணையில் வினேஷ் போகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். மேல்முறையீட்டில் வினேஷ் வெற்றி பெற்றால், அவருக்கு கூட்டு-வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும். மனு நிராகரிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செல்லுபடியாகும், மேலும் பாரிஸ் ஒலிம்பிக் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பெறுவார்.
தகர்ந்த கனவுகள்:
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் 53 கிலோ எடையிலிருந்து 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறிய இந்திய நட்சத்திர வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கில் அபாரமாக செயல்பட்டார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் உறுதியானது . ஆனால், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததற்காக வினேஷ் போகத் தனது தங்கப் பதக்கப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் விளைவாக, போகத் அரையிறுதியில் வீழ்த்திய யூஸ்னிலிஸ் குஸ்மான், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதில், அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்ட் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, மல்யுத்த போட்டிகளில் இருந்தே தான் ஓய்வுபெறுவதாக, வினேஷ் போகத் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.