பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற அர்சாத் நதீமும் எனக்கு மகன் போல் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறியுள்ளார்.


பாரீஸ் ஒலிம்பிக் 2024:


கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. இதில், 30 தங்க பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 29 தங்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 18 தங்கங்களுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் நான்கு வெண்கலங்களுடன் இந்தியா 64 வது இடத்தில் உள்ளது. 


முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் வெள்ளி வென்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த அர்சாத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தைச் தட்டிச் சென்றார்.


அர்சாத் நதீமும் என் மகன் தான்:


இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் இருவருக்கும் வாழ்த்து கூறி வரும் நிலையில் நீரஜ் சோப்ராவின் தாயார், "அர்சாத் நதீமும் என்னுடைய மகன் தான் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று பேசுகையில், "எனது மகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.  




தங்கம் வென்ற அர்சாத் நதீமும் எனது மகனைப்போலத்தான். எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் போட்டியில் பங்கேற்கிறார்கள். நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கு வரும் போது அவருக்கு பிடித்த இனிப்பு பலகராத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் " என்று கூறினார் நீரஜ் சோப்ராவின் தாய் சரோஜ் தோவி.