டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.  கொலம்பிய அணி வீரர் ஆஸ்கருக்கு எதிரான முதல் சுற்றுப்போட்டியில் களமிறங்கிய ரவிக்குமார் தாஹியா, 13-2 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில், பல்கேரியாவைச் சேர்ந்த ஜார்ஜி வேலண்டினோவை எதிர்த்து போட்டியிட்ட அவர், 14-4 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் அரையிறுதிப் போட்டியில் நுழைந்து அசத்தினார். 


அதைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூருளிஸ்லாம் சனாயேவை எதிர்த்து விளையாடினார். முதல் ரவுண்டில் தொடக்கத்தில் ரவிக்குமார் தாஹியா சற்று தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் அந்த ரவுண்டின் இறுதியில் 2 புள்ளிகள் எடுத்தார். இதனால் முதல் ரவுண்டின் முடிவில் ரவிக்குமார் தாஹியா 2-1 என இருந்தார்.இதனைத் தொடர்ந்து இரண்டாவது ரவுண்டில் கஜகிஸ்தான் வீரர் சுதாரித்து கொண்டு வேகமாக 8 புள்ளிகளை எடுத்தார். இறுதியில் கஜகிஸ்தான் வீரரை பின் முறையில் தோற்கடித்து ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.  நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா பங்கேற்கிறார். இன்று மாலை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரர் உகுயேவை எதிர்த்து விளையாட உள்ளார். 






இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரவிக்குமார் சனாயேவை பின்ஃபால் செய்ய முயற்சி செய்த போது கஜகிஸ்தான் வீரர் ரவிக்குமார் கையில் கடித்துள்ளார். இது தொடர்பான படமும் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்தப் படங்களை பதிவிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இது மிகவும் அநியாயமான செயல். வெட்கக்கேடு. அவருக்கு ரவிக்குமாருடன் போட்டியில் மோத முடியாமல் இதைச் செய்துள்ளார். நல்ல வேளை இது ரவிக்குமாரின் ஆட்டத்தை பாதிக்கவில்லை. இது கஜகிஸ்தான் வீரர் சனாயேவ் செய்த வறுந்தக்க செயல். ரவிக்குமார் தாஹியா நீங்கள் சிறப்பாக சண்டை செய்து விளையாடினீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார். வீரேந்திர சேவாகின் இந்தப் பதிவு தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது. சேவாக்கிற்கு ஆதரவாகவும் ரவிக்குமார் தாஹியாவை பாராட்டியும் பலரும் தங்களது பதிவுகளை செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க: இந்திய ஹாக்கி கேப்டனுக்கு பிரதமர் மோடியின் ‘சர்ப்ரைஸ் அழைப்பு’