41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று ஹாக்கியையும், இந்திய ஹாக்கி அணி வீரர்களையும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அனைவரது கவனமும் மீண்டும் மீண்டும் ஒருவரின் பக்கம் மட்டும் சென்று கொண்டிருக்கின்றது. போட்டிக்களத்தில் க்ளவுஸ்கள் போட்டுக்கொண்டும், ஹெல்மெட் மாட்டிக்கொண்டும் முகம் தெரியாமல் களத்தில் அரணாய் நின்ற அந்த முகத்தை காண இன்று கூகுளில் அவரது பெயரை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆம், நீங்கள் யூகித்தது சரிதான். அவர் வேறு யாருமில்லை, இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்தான்!


இன்று நேற்று தொடங்கிய பயணமில்லை, 15 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணியின் அரணாக இருந்து வருபவர். 36 வயதாயிற்று, இந்த வயதில் விளையாட்டுக்கு ஓய்வு அறிவித்துவிட்டு பயிற்சியாளராகவோ, உடற் பயிற்சி நிபுணராகவோ, கிடைத்த அரசு உத்யோகத்தை வைத்து கொண்டு தூரத்தில் இருந்து மட்டும் விளையாட்டை ரசித்து கொள்ளலாம் என ஸ்ரீஜேஷ் நினைத்திருக்கவில்லை. இவர் ஓடவில்லை, ஒதுங்கவில்லை. களத்தில் நிற்க வேண்டுமென வேட்கை கொண்டு போராடினார். இன்று, இந்திய அணியின் வெற்றிக்கு பின்னாலும், களத்தில் வலைக்கு முன்னாலும் நின்று வென்றிருக்கிறார். 






கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஸ்ரீஜேஷின் சொந்த ஊர். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கூடைப்பந்து , ஈட்டி எறிதல், வட்டு எறிதல் என அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். ஆனால், ஹாக்கி இவரை தேர்ந்தெடுத்தது. விருப்பமில்லாமல் ஹாக்கி விளையாட அரம்பித்த அவர், இன்று இந்திய அணியின் தடுப்புச்சுவர். 


சரி, ஹாக்கி விளையாட வேண்டும் என முடிவு செய்த ஸ்ரீஜேஷ், கோல் கீப்பர் ஆன கதையும் சுவாரஸ்யம் நிறைந்தது. ஸ்ரீஜேஷின் ஓட்டத்தில் வேகமில்லை.  ஹாக்கி வீரருக்கு வேகமான ஓட்டம் மிகப்பெரிய ப்ளஸ். ஸ்ரீஜிஷை கண்டுக்கொண்ட பயிற்சியாளர் ஜெயகுமார், கோல்கீப்பராக இருப்பதற்கு நீ தகுதிப் பெறுவாய் என தெரிவித்துள்ளார். எதிர்பார்க்காத நேரத்தில் ஹாக்கி, ஹாக்கியில் கோல்கீப்பர் என தொடர்ந்த ஸ்ரீஜேஷின், பின் நாளில் இந்திய ஹாக்கியின் தவிர்க்க முடியாத கோல்கீப்பராக பெயர் பெறுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். 



இன்று, ஒரு போட்டியை பற்றி மட்டும் எல்லோரும் கொண்டாட காரணம், அந்த கடைசி நிமிட திக் திக். போட்டி முடிய 6 நொடிகள் இருந்தபோது ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு சில நொடிகளில் ஸ்ரீஜேஷ் தடுத்த பெனால்டி, இந்தியாவின் 41 வருட கனவுக்கு போடப்பட்டிருந்த தடுப்பை விலக்கி இருக்கின்றது.


கேரளாவில் கொண்டாடப்பட்டு வந்த ஸ்ரீஜேஷ், இன்று இந்திய அளவில் கொண்டாப்பட்டு வருகிறார். கேரளாவில் உள்ள ஒரு தெருவுக்கு ஸ்ரீஜிஷின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், இன்று இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு பரிச்சயமான முகமாக மாறியிருக்கிறார். ஹாக்கி விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அணியில் இடம் பெற்ற வீரராக மட்டுமல்லாமல், கோல் கீப்பர் கனவுகளையும், ஹாக்கியில் அதன் முக்கியத்துவத்தையும் மக்களிடம் கடத்திவிட்டார். கிரிக்கெட்டிற்கு ராகுல், ஹாக்கி விளையாட்டிற்கு ஒரு ராகுல் டிராவிட் இல்லை, இங்கு ஸ்ரீஜேஷ் ஒருவர்தான், அது இவர் மட்டும்தான்!


வாழ்த்துகள் ஸ்ரீஜேஷ்!