டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் இன்று மோதின. ரியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஜெர்மனி, இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. இதுவரை 5 முறை இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதியுள்ள போட்டிகளில். 1 முறை மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி போட்டி முடிவில் 5-4 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது பதக்கத்தை தட்டிச் சென்றது. 


41 ஆண்டுகளுக்குப் பிறகு அணி பதக்கத்தை வென்றதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது வாழ்த்தில், ஒவ்வொரு இந்தியரின் நினைவில் பதிந்திருக்கும் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். 






மேலும், இந்திய அணி கேப்டன் மந்தீப் மற்றும் பயிற்சியாளர் கிரஹம் ரெய்டிற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றியால் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இது இந்திய ஹாக்கி அணியின் தீவிர உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதற்கு கேப்டனும், பயிற்சியாளரும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.






இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பதக்கம் வெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. பெல்ஜியம் அணியுடனான அரை இறுதி போட்டியில், 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனால் ஃபைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.