பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று(ஆகஸ்ட் 6)நடைபெற்ற மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் 
உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார் வினேஷ் போகத். இதை அடுத்து கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.


கால் இறுதியில் உலகின் எட்டாம் வரிசை வீராங்கனையான உக்ரைனின் ஒக்ஷானா லிவாச்-சை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார். அந்த வகையில் அரையிறுதிப்போட்டி இன்று இரவு தொடங்கியது. இதில் வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை எதிர்கொண்டார்.


வரலாற்று சாதனை:






ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடினார். அந்தவகையில் 50 கிலே எடைப்பிரிவில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற கணக்கில் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.


இதன் மூலம் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் அவருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வினேஷ் போகத்தின் இந்த வெற்றியை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மகளிர் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டி நாளை (ஆகஸ்ட் 7) இரவு 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டேபிராண்டன்டை எதிர்கொள்ள இருக்கிறார் வினேஷ் போகத்.