பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பகா நடைபெற்று வருகிறது. இதில், இன்று(ஆகஸ்ட் 6)நடைபெற்ற மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் 
உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியை 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார் வினேஷ் போகத். இதை அடுத்து கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.


கால் இறுதியில் உலகின் எட்டாம் வரிசை வீராங்கனையான உக்ரைனின் ஒக்ஷானா லிவாச்-சை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் 7 - 5 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார். அரை இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு 10.25க்கு நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் அவர் வென்றால் அவருக்கு பதக்கம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலியல் குற்றச்சாட்டு:






காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார். "நான் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய் சிங்கும் இணைந்து அனைத்து வழியிலும் முயற்சித்து வருகிறார்கள்”என ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தார். இச்சூழலில் இவரது இந்த வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.