Paris Olympics 2024: பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை யாருமே தங்கம் வெல்லவில்லை. இந்த ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்த இந்தியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பது நீரஜ் சோப்ரா மீது ஆகும்.


இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா?


கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று அபினவ் பிந்தராவிற்கு பிறகு தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாறு படைத்தார். ஈட்டி எறிதல் போட்டியில் உலகம் முழுவதும்  பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நீரஜ் சோப்ரா நடப்பு ஒலிம்பிக் தொடரில் களமிறங்கியது முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்த நிலையில், ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி செல்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் தொலைவிற்கு தனது முதல் வாய்ப்பிலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.


சவால் தரும் பாகிஸ்தான் வீரர்:


இந்த ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவிற்கு சவால் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் தனது வீரர் ஒருவரை களமிறக்கியுள்ளது. அர்ஷத் நதீம் கடந்த ஒலிம்பிக்கில் இவர் கடும் சவால் தரும் வகையில் செயல்பட்டார். இவர் தகுதிச்சுற்றில் 86.59 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தகுதி பெற்றார். இறுதிப்போட்டியில் இவர் நீரஜ் சோப்ராவிற்கு சவால் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அர்ஷத் நதீமின் சிறந்த ஈட்டி எறிதலாக 90.18 மீட்டர் பதிவாகியுள்ளது. 2022ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் அவர் இந்த தொலைவிற்கு வீசியிருந்தார். நீரஜ் சோப்ராவின் சிறந்த ஈட்டி எறிதல் தொலைவு டைமண்ட் லீக் தொடரில் வீசிய 89.94 மீட்டர் தொலைவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மல்லுக்கட்டப்போவது யார்?


கடந்த ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இரண்டாவது இடத்தை செக் வீரர் ஜேக்குப்பும், 3வது இடத்தை செக் நாட்டைச் சேர்ந்த வெஸ்லியும், 4வது இடத்தை ஜெர்மன் வீரர் வெப்பரும், 5வது இடத்தை பாகிஸ்தான் வீரர் அர்ஷீத் நதீமும் வென்றனர்.


அர்ஷீத் நதீம் கடந்த ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் 84.62 மீட்டர் தொலைவிற்கு வீசினார். இதனால், நடப்பு ஒலிம்பிக்கில் கட்டாயம் பதக்கம் வென்றே தீரும் நோக்கத்தில் அவர் களமிறங்கியுள்ளார். இதனால், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு சவால் அளிக்கும் விதமாக அவர் செயல்படுவாரா? என்று அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


நாளை நடைபெறும் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவுடன், கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் வெப்பர், பாகிஸ்தானின் அர்ஷீத் நதீம், கென்யாவின் ஜூலியஸ் யேகோ, பிரேசிலின் லூயிஸ் மெளரிசியோ டா சில்வா, செக் குடியரசின் ஜகுப் வட்லேஜ், பின்லாந்தின் டோனி, மால்டோவா நாட்டின் ஆண்ட்ரியன் மர்டரே, பின்லாந்தில் ஆலிவர், டிரினிடாட் டொபோகாவின் கிஷோர்ன் வால்காட் மற்றும் பின்லாந்தில் லஸ்ஸி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய நேரப்படி இந்த போட்டி நாளை இரவு 11.55 மணிக்கு நடக்கிறது.


இந்திய நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையாக நீரஜ் சோப்ரா திகழும் நிலையில், அவர் பதக்கம் வெல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.