இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து நாட்டின் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்சும், ஹசீப் ஹமீதும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 135 ரன்களை குவித்தனர். ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹசீப் ஹமீது 68 ரன்களும் குவித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்ட டேவிட் மலானும் ஒருநாள் போட்டியைப் போல ஆடி 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்து வரும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த இன்னிங்சிலும் சதம் அடித்து இங்கிலாந்து வலுவான நிலையை எட்ட உதவினார். இந்த தொடர் தொடங்கி நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ரூட் 121 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 423 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் உள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணி இந்தியை அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த தொடர் தொடங்கியது முதல் எந்தவொரு வீரரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஜடேஜா, ரிஷப்பண்ட் என்று ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் அவுட் ஆப் பார்மில்தான் உள்ளது. அதுவும் ரன் மெஷின் என்று வர்ணிக்கப்பட்டு வந்த கோலியின் பேட்டிங் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
இந்திய அணி எப்படியும் இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிடும். அப்படி தொடங்கினால், இங்கிலாந்தைவிட முன்னிலை பெறுவது என்பதே சவாலான விஷயம் ஆகும். அதுவும் இந்திய அணி தற்போதுள்ள பேட்டிங் பார்மில் இங்கிலாந்தை விட முன்னிலை பெறுவது என்பது கடினமானது என்றே கருதப்படுகிறது. இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன், சாம்கரன், கிரெய்க் ஓவர்டன் என வலுவான பந்துவீச்சு உள்ளது.
இதையும் பார்க்கவும் : தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
இதனால், இந்திய அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய முன்னாள் பேட்ஸ்மேன்கள் ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் இணைந்து கொல்கத்தாவில் நிகழ்த்திய சாதனையைப்போல யாரேனும் அதிசயத்தை நிகழ்த்தினால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் வருணபகவான் வழிவகுத்து இந்திய அணியை காப்பாற்ற வேண்டும்.
இந்த நிலையில், மழையினால் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்க சற்று தாமதமானது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்து அணியினர் எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுளையும், பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கி ஆடி வருகின்றனர்.