டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் தடகள பிரிவில் கடைசியாக இந்தியா சார்பில் எஃப்-41 ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நவ்தீப் பங்கேற்றார். ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிகளில் இந்தியாவின் சுமித் அண்டில் தங்கம் வென்றார். அத்துடன் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜர் வெண்கலப்பதக்கமும் வென்று இருந்தனர்.  இதனால் நவ்தீப் மீதும் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு நவ்தீப் தன்னுடைய சிறந்த தூரமாக 43.58 மீட்டர் வரை வீசியிருந்தார். இது அந்தப் பிரிவில் உலக சாதனையான 44.35 மீட்டர் தூரத்திற்கு மிகவும் அருகே என்பதால் இவர் பதக்கம் வெல்லுவார் என்று கருதப்பட்டது. 


இந்நிலையில் இன்று இறுதி போட்டியில் நவ்தீப் முதல் முயற்சியில் 38.59 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 38.33 மீட்டர் தூரம் வீசினார். மூன்றாவது முயற்சியில் 39.97 மீட்டர் தூரம் வீசினார். நான்காவது முயற்சியில் அதிகபட்சமாக 40.80 மீட்டர் தூரம் வீசினார். ஐந்தாவது முயற்சியில் ஃபவுல் செய்தார். இதனால் நவ்தீப் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருந்தார். வெண்கலப்பதக்கத்தை பெற வேண்டும் என்றால் கடைசி முயற்சியில் 41.39 மீட்டருக்கு மேல் வீசி வேண்டிய கட்டாயம் இருந்தது. அதில் நவ்தீப் தன்னுடைய கடைசி முயற்சியிலும் அவர் ஃபவுல் செய்தார். இதனால் அதிகபட்ச தூரமாக 40.80 மீட்டர் வீசி நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். 


 






முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவருக்கான 50 மீட்டர் கலப்பு பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கிடைத்திருந்தது. 19 வயதான மணீஷ் நர்வால் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் 39 வயதான சிங்கராஜ் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். சிங்கராஜ் ஏற்கெனவே டோக்கியோ பாராலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒரே பாராலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். 


மேலும் படிக்க:‛போலியோ டூ டோக்கியோ’ உலகம் வியக்கும் இந்தியன்: உலக சாம்பியன் பிரமோத் பக்தின் கதை !