டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். அதில் பிரமோத் பகத், மனோஜ் சர்கார், சுஹேஷ் யேத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். அத்துடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்- பாலக் கோலி ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதில் இந்தியாவின் பிரமோத் பகத், சுஹேஷ் ஆகியோர் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியுள்ளனர். அத்துடன் மனோஜ் சர்கார் தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு அரை இறுதி போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் கிருஷ்ணா நகர், கிரேட் பிரிட்டன் வீரர் கிறிஸ்டனை எதிர்த்து விளையாடினர். இதில், 21-10, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு கேம்களை கைப்பற்றி போட்டியை வென்றார். இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் மூலம், தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.
ஏற்கெனவே எஸ்.எல் 3 பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு உலக சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான இந்தியாவின் பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார். அவர் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் பெத்தேலை எதிர்த்து விளையாட உள்ளார். அதைத் தொடர்ந்து காலை 11.45 மணிக்கு பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி இணை கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ஹரி சுசான்டோ-லியானி இணையை எதிர்த்து விளையாட உள்ளது.